×

ஓணம், மிலாது நபி விடுமுறையால் களை கட்டியது கன்னியாகுமரியில் 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் படகுசவாரி: குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை மற்றும் மிலாது நபி விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகுசவாரி செய்து கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஓணம் பண்டிகையன்று (15ம்தேதி) 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலில் படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நேற்றுமுன்தினம் விடுமுறை இல்லை என்றாலும் மக்கள் கூட்டத்துக்கு குறைவில்லை. காலையில் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும் மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இரவிலும் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே தென்பட்டது. குதிரை சவாரி செய்வது, ரிமோட் கார்களில் குழந்தைகளை அமரவைத்து விளையாடுவது என கலகலப்பாக இருந்தது. நேற்று முன்தினமும் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்றும் காலை முதலே சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். திரிவேணி சங்கமத்தில் காலை சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். மேலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகில் சென்று பார்வையிட்டனர். நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் படகுசவாரி செய்தனர். கடந்த 2 நாட்களை விட நேற்று அதிகம்பேர் படகுசவாரி செய்துள்ளனர்.

இதன்படி கடந்த 3 நாட்களில் மொத்தம் 25 ஆயிரத்து 100பேர் படகுசவாரி செய்துள்ளனர். கேரளாவில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால், அங்குள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தது குறிப்பிடதக்கது.

The post ஓணம், மிலாது நபி விடுமுறையால் களை கட்டியது கன்னியாகுமரியில் 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் படகுசவாரி: குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Onam ,Milad ,Nabi ,Kanyakumari ,Vivekananda Memorial Hall ,Onam festival ,Milad Nabi ,Dinakaran ,
× RELATED மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்