புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் கடந்த ஜூன் 16ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான பயன்பாட்டில் 100 முதல் 200 யூனிட் வரையில் யூனிட்டுக்கு ரூ.4 கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2ம் தேதி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

தொடர்ந்து இன்று புதுச்சேரி முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முழு அடைப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வருவதால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பணிக்கு புதுச்சேரி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

 

The post புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: