×

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் பயன்படுத்தி இடிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய பள்ளி மாணவன் தனது வகுப்பில் படிக்கும் இந்து மாணவன் ஒருவரை சண்டையின் போது கத்தியால் குத்தியதில் அந்த மாணவன் இறந்து விட்டான். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்லாமிய மாணவனின் தந்தை ரஷீத் கானின் வீடு உதய்ப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. இதேப்போன்று மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது உசைன் என்பவரும் வழக்கு ஒன்றில் சிக்கிய போது அவரது வீடும் கடையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கியது. இந்த இருவர் சார்பிலும் இத்தகைய புல்டோசர் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாஜ ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் அரியானா, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து மேற்கண்ட இரு மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டாலே அவர்களின் வீடுகளை இடிப்பீர்களா என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுக்களுக்கு கடந்த 2ம் தேதி சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதிகள் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதில்,‘‘இந்த விவகாரத்தில் வழக்கின் அடுத்த விசாரணை வரும் வரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளையோ அல்லது கட்டிடங்களையோ புல்டோசர் கொண்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இடிக்கக் கூடாது. அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது.

இருப்பினும் தெருக்கள், நடைபாதைகள் மற்றும் ரயில் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குறிப்பிட்ட விதிமுறைகள் என்பது பொருந்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘நீதிமன்றத்தின் உத்தரவு அதிகாரிகளின் கைகளை கட்டி போட்டது போல உள்ளது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவை பின்பற்றுவதால் வானம் இடிந்து விழுந்து விடாது எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் பயன்படுத்தி இடிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Rajasthan ,Udaipur ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...