×

செங்குன்றம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் அவதி

புழல்: செங்குன்றம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்குன்றம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சிக்னல் சந்திப்பில் இருந்து தீர்த்தங்கரையும் பட்டு, சோத்துப்பாக்கம், கும்மனூர், பூதூர் செல்லும் சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, செங்குன்றம் தீயணைப்பு நிலையம், குழந்தைகள் அங்கன்வாடி மையம், உழவர் சந்தை மற்றும் தனியார் வங்கியின் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கிருந்த, பழைய கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி, குண்டும் குழியுமாக காணப்படும் சோத்துப்பாக்கம் சாலையில் தேங்கியுள்ளது. இதனால், இச்சாலையில் நடந்துச்செல்ல முடியாமல் கூட பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பதால் இருட்டாகவே காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் இரவு நேரங்களில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.

ஒருசில நேரங்களில் வழிப்பறிகளும், பாலியல் தொல்லைகளும் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை சீரமைக்க தீர்த்தங்கரை பட்டு ஊராட்சி, கும்மனூர், பூதூர் ஆகிய ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து, சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலைகள் மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் எரிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

The post செங்குன்றம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Senkunram ,Sengunram ,Sothupakkam ,Sengunram Chennai- ,Kolkata National Highway ,Tirthankarai ,Pattu ,Chothupakkam ,Kummanur ,Buthur ,
× RELATED மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி