×

கலசபாக்கம் அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கலசபாக்கம், செப்.17: கலசபாக்கம் அருகே நேற்று பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கலசபாக்கம் ஒன்றியம் காம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் உள்ளது கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.

பிரசித்தி பெற்ற கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார். தொடர்ந்து இப்பகுதி மக்கள் சார்பில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வலியுறுத்தியதின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலாலயம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் புனரமைக்கப்பட்டு இதற்கான கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரத்தின் உச்சியில் புனித நீரூற்றிட கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பச்சையம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணை பிளந்தது. ஏராளமான பெண்கள் சாமி வந்து ஆடினர். எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நேற்று இரவு உற்சவமூர்த்திகள் வாணவேடிக்கை முழங்கிட சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post கலசபாக்கம் அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Pachaiyamman Sametha Mannar Sami Temple ,Kumbabhishekam ,Pachaiyamman Sametha Mannarsamy temple ,Kampattu village ,
× RELATED பளு தூக்கும் போட்டியில் சாதனை புதுப்பாளையம் வன அலுவலர்