×

கொள்ளிடம் பகுதியில் பாசன கிளை வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள முக்கிய கிளை வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதி கடைமடை பாசன பகுதியாக இருந்து வருகிறது. இதனால் பாசனத்திற்கு அணைக்கரையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட உடன் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு மற்ற பகுதிகளை விட மேலும் ஒரு வார காலத்திற்கு பிறகு தான் தண்ணீர் வந்து சேருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் போனதால் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தண்ணீர் வந்து சேருவதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்தான் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பிரதான பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்துவங்கியது. இதனால் விவசாயிகள் காலம் தாழ்த்திய போதிலும் சம்பா சாகுபடி செய்யும் பணியை தீவிரமாக துவங்கி செயல்பட ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்கால்கள் அமைந்துள்ள இடங்களில் பாசனத்திற்கு தண்ணீர் எளிதில் கிடைத்து வந்தாலும் பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வயல்களுக்கு சென்று சேருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிரதான பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதுபோல அனைத்து பாசன கிளை வாய்க்கால்களும் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் அனைத்து இடங்களுக்கும் சென்று சேராமல் இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் முக்கிய பாசனமாக இருந்து வரும் சந்தன வாய்க்கால் கழுதை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் போதிய அளவுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் விடப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது. கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம்,மாணிக்கவாசல், கூட்டுமாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சந்தன வாய்க்கால் மூலம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆச்சாள்புரம், குதிரைகுத்தி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த இரு வாய்க்கால்கள் மூலம் கடந்த 20 நாட்களாக போதிய தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடாததால் நேரடி விதைப்பு செய்து தண்ணீருக்காக காத்திருந்த விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். நேரடி விதைப்பு செய்து 20 நாட்களுக்கு மேல் இருந்த சுமார் 100ஏக்கர் நிலங்களில் தண்ணீர் இன்றி மீண்டும் ஒருமுறை விதைப்பு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால் ஆலாலசுந்தரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் உள்ள சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நேரடி விதைப்பு செய்தும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் மீண்டும் ஒருமுறை நேரடி விதைப்பு செய்தால்தான் சம்பா நெற்பயிர் சாகுபடியை தொடர முடியும்.

இதுகுறித்து ஆலாலசுந்தரம் கிராமத்தைச் சேர்ந்தபாசன தாரர் சங்கத் தலைவர் பாண்டியன் கூறுகையில் ஆலாலசுந்தரம், கூட்டுமாங்கடி, மாணிக்கவாசல் உள்ளிட்ட கிராமங்களில் சந்தன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் நேரடி விதைப்பு செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தண்ணீர் இன்றி விதைப்பு திறன் இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்த நிலங்களில் மீண்டும் சம்பா நேரடி விதைப்பு செய்தால்தான் சம்பா சாகுபடி செய்ய முடியும்.

முன்கூட்டியே தண்ணீர் கூடுதலாக திறந்து விட்டிருந்தால் நஷ்டத்தை தவிர்த்திருக்க முடியும். எனவே பிரதான பாசன வாய்க்கால்களில் தண்ணீர் அதிகம் வந்து கொண்டிருக்கும் நிலையில் உடனடியாக இனியாவது பாசன கிளை வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

The post கொள்ளிடம் பகுதியில் பாசன கிளை வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4...