×

குமரி மாவட்டத்தில் திருவோண பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

* வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்து மகிழ்ந்தனர்

நாகர்கோவில் : வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்து குமரி மாவட்டத்தில் திருவோண பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.மலையாள மொழி பேசும் கேரள மக்களின் அறுவடை விழாவும், கலாச்சார விழாவுமான திருவோணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. மகாபலி மன்னர் மக்களை காண வரும் போது நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ‘அத்தம் பத்தினு பொன்னோணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ் மாதமான ஆவணி மாதம் அத்தம் நட்சத்திர தினத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கின. 10ம் நாளான நேற்று திருவோண நட்சத்திரத்தன்று திருவோண பண்டிகை கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்திலும் திருவோண பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியிருந்தது. மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் கடந்த சில நாட்களாகவே திருவோண பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வந்தன. மாணவ மாணவியர் பங்கேற்று அத்தப்பூக்களம் அமைத்தும், விளையாட்டு போட்டிகள் நடத்தியும், வண்ண வண்ண ஆடைகள் அணிந்தும் கொண்டாடினர்.

திருவோண பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை மக்கள் கேரள பாரம்பரிய புத்தாடை அணிந்து, கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை, வழிபாடுகள் செய்தனர். வீடுகளில் அத்தப்பூக்களங்கள் அமைத்து மகிழ்ந்தனர். உறவினர்கள் நண்பர்களை அழைத்து ‘ஓண சத்யா’ எனப்படும் அறுசுவை உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். ஓண சத்யாவில் அவியல், கிச்சடி, பச்சடி, துவரன் உள்ளிட்ட கறி வகைகளும், அடைபிரதமன் உள்ளிட்ட பாயச வகைகளும் இடம்பெற்றிருந்தன.

மாவட்டத்தில் குறிப்பாக விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்களில் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது. குழித்துறை, குலசேகரம், அருமனை, களியக்காவிளை, திற்பரப்பு, தக்கலை, பத்மநாபபுரம் பகுதிகளில் ஓணப் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓண விழாக்கள் நடைபெற்றன. மகாபலி மன்னர் வேடம் அணிந்தவர் முன்செல்ல கலாச்சார ஊர்வல நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் இளைஞர்கள் புலி வேடமணிந்தும், பாரம்பரிய உடைகள் அணிந்தும் பங்கேற்றனர். மேலும் உறியடி, எறிபந்து, கிளியாந்தட்டு உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். வீடுகளில் ஓண ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டு பெண்களும், சிறுவர் சிறுமியரும் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். நாகர்கோவிலில் வடசேரி, கிருஷ்ணன்கோயில், வடிவீஸ்வரம், பார்வதிபுரம், கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் அத்தப்பூக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருவோண பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரகோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

The post குமரி மாவட்டத்தில் திருவோண பண்டிகை உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvona festival ,Kumari district ,Thiruvonam ,Attapookalam ,Nagercoil ,Thiruvonam festival ,Kerala ,King ,Mahabali ,Thiruvanna festival ,
× RELATED குமரியில் திருவோண பண்டிகை கோலாகலம்:...