×

பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பென்ட்

*வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை

நாகர்கோவில் : பெண் பயணிகளை ஏற்றிச்செல்லாததால் அரசு பஸ்சை பின் தொடர்ந்து காரில் வந்த இளைஞர்கள் டிரைவருக்கு எச்சரிக்கை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் டிரைவர், கண்டக்டரை சஸ்பென்ட் செய்து போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் இருந்து நாகர்கோவில், வடசேரி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அது மகளிருக்கு இலவச பயணத்திற்கான பஸ் ஆகும். அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 பெண்கள் பஸ்சை நிறுத்த கை காண்பித்தனர். ஆனால் பஸ்சை நிறுத்தாமல் அதன் டிரைவர் தொடர்ந்து இயக்கி சென்றார்.

இதனை அந்த பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் காரில் பின்தொடர்ந்து பஸ்சை நிறுத்தினர். பின்னர் பஸ் டிரைவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குறிப்பிட்ட அந்த பஸ் நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பஸ் டிரைவர் ஸ்டீபன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை சஸ்பென்ட் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டார்.

The post பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பென்ட் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,
× RELATED 6 ஊராட்சிகள் இணைகிறது நாகர்கோவில் மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம்