×

இலங்கை சிறையில் இந்திய மீனவர்களை இழிவுபடுத்தும் இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.!!

சென்னை: இலங்கை சிறையில் இந்திய மீனவர்களை இழிவுபடுத்தும் இலங்கை அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய-இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில், குறிப்பாக கச்சத்தீவின் அருகில் தொன்றுதொட்டு மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும்
இடையே கச்சத் தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம். இதற்கேற்ப, தமிழ்நாட்டு மீனவர்களும் தங்கள் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை சிறைபிடிப்பதையும், அவர்களுடைய படகுகளை பிடித்து வைத்துக் கொண்டு திருப்பித் தராமல் இருப்பதையும், கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதையும், மீன்பிடி வலைகளை கிழித்தெறிவதையும், தமிழக மீனவர்களை துன்புறுத்துவதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், அண்மையில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்ததாகவும், இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், மூன்று மீனவர்கள் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டதால் அவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், மீதமுள்ள ஐந்து மீனவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம், அதைச் செலுத்த தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அபராதத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு சிறையில் இருந்த ஐந்து தமிழக மீனவர்களை மொட்டையடிக்க கட்டாயப்படுத்தியதாகவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும், குப்பைகளை அள்ளச் சொல்லி வலியுறுத்தியதாகவும் தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்து மீனவர்களும் மொட்டையடிக்கப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். மேலும், தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்களை இலங்கை அரசு மிக மோசமாக நடத்துவதாக தாயகம் திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்ற தீய நோக்கத்துடனும், தமிழக மீனவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தங்களுடைய பாரம்பரியமான இடத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக பொய்க் குற்றஞ்சாட்டி அவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது என்பது மிருகத்தனமான செயல். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஏழை மீனவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய மீனவர்கள்மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதல்கள் மற்றும் தொடர் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்; இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை சிறையில் இந்திய மீனவர்களை இழிவுபடுத்தும் இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Sri Lankan government ,Chennai ,Former ,Chief Minister ,Tamil Nadu ,Indo ,Kachchathivi ,
× RELATED இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்