அமெரிக்க பயண சிறகுகள்-1 முதலீடுகளை ஈர்க்க பெரும் நம்பிக்கை அளித்த பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு தனது அமெரிக்கப் பயண அனுபவங்களைக் கடிதத் தொகுப்புகளாக எழுதுகிறார். அதன் முதல் பகுதியை நேற்று அவர் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கினை நிர்ணயித்து, மூன்றாண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசின் திறன்மிகு முயற்சிகளால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆகஸ்ட் 27 அன்று இரவு பயணம் மேற்கொண்டேன். சான் பிரான்சிஸ்கோ நகரத்தை ஆகஸ்ட் 28 அன்று சென்றடைந்தேன்.

இந்தியத் தூதரக அதிகாரி ஸ்ரீகர் ரெட்டி அன்பான வரவேற்பை அளித்தார். சான் பிரான்சிஸ்கோவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மண்ணிலிருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார் என்ற உணர்வுடன் விமான நிலையத்திற்குக் குடும்பத்துடன் வருகை தந்து அன்பான வரவேற்பை அளித்தனர். ஆகஸ்ட் 29 அன்று முதலில் என்னை வந்து சந்தித்த நிறுவனம், ஃபார்ச்சூன் 500 எனப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனமாகும்.

நோக்கியா நிறுவனத்துடன் நடந்த சந்திப்பின் விளைவாக, சென்னை சிறுசேரி சிப்காட்டில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடும் வகையில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து, பே-பால் நிறுவனத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையிலான செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதுபோலவே, செமிகண்டக்டர்களை வடிவமைக்கும் கருவிகளின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், கோயம்புத்தூர் சூலூரில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
குறைக்கடத்தி உற்பத்தியில் புகழ்பெற்ற மற்றொரு முன்னணி நிறுவனமான மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முதன்மை நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

பகல் பொழுதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில் அன்று மாலையில் முதலீட்டாளர்களுடனான மாநாடு நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு தொழில்துறையில் நடத்தியுள்ள பாய்ச்சலைத் தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி என்ற டேட்டா சென்டர் தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கில் நடைபெற்றது.

அயலகத்திலும் தமிழ் உறவு: முதலீட்டாளர் மாநாடு முடிவடைந்தபிறகு, ஃபேர்மாண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, லாபியில் தமிழர்கள் காத்திருந்தனர். அவர்களின் எத்தனையோ உணர்ச்சிகரமான கடிதங்கள், கவிதைகள் என பயணம் முழுவதும் கைகளுக்கு கிடைத்தது. சிலிகான் வேலியில் சிறப்பான ஒப்பந்தங்கள்: ஆகஸ்ட் 31-ஆம் நாள் சிலிகான் வேலியில் பயணித்தோம்.முதலில் சென்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவன உயர் அலுவலர்களுடனான சந்திப்பு இனிமையாகத் தொடங்கியது.

தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தமிழர்கள் பலர் நல்ல பொறுப்பில் இருப்பது தெரிந்தது. தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பயிற்சியளிக்கும் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டனர். அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தில் முதன்மைப் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை வரவேற்றதுடன், தமிழ்ப் பாடல் ஒன்றை ஒலிக்கவைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் கோவை கபே என்ற உணவகத்தை நடத்துகின்றனர். அங்கே நமது பாரம்பரியப்படி, வாழை இலையில், நம் ஊர் சாப்பாட்டைப் பரிமாறினார்கள். பசிக்கேற்ற ருசியுடன் உணவு சிறப்பாக இருந்தது. வாழ்த்தி வரவேற்ற நல் உள்ளங்கள்: அன்று மாலையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்புக்கு இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறிய அரங்கம் – நிறைந்த கூட்டம் – பொங்கி வழிந்த பேரன்பு – வாழ்த்து முழக்கங்கள் என உள்ளம் ஒன்றிய நிகழ்வாக அது அமைந்தது. செப்டம்பர் 1 அன்று ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்தது. அன்று, கடலுக்கும் மலைக்கும் இடையிலான சாலையில் ஆள் இல்லாத காரில் பயணித்தது இனிமையான சாகசம் போல அமைந்தது. எழில்மிகு சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டியது இனிய அனுபவமாக இருந்தது.

சிகாகோ நோக்கிப் பறந்த சிறகுகள்: சான் பிரான்சிஸ்கோ நகரம் உழைப்புக்கும் உரிமைக்கும் பெயர் பெற்றதாகும். 20ம் நூற்றாண்டில் இங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள், 1960களில் நடந்த சிவில் உரிமை இயக்கம் போன்றவற்றால் சமத்துவக் கொள்கையின் களமாக விளங்குகிறது. இங்கு செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையை (இந்த ஆண்டு 2ஆம் தேதி) தொழிலாளர் நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க அந்த நாளில், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்கு அகலமான வாசலைத் திறந்து வைத்த சான் பிரான்சிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சி. புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான வரலாறும் பதிவாகியிருப்பதை நினைத்து, ஹோட்டல் வாசலில் உள்ள பாடகர் டோனி பென்னட் சிலை முன்பாகப் படம் எடுத்துக்கொண்டு, சிகாகோ நோக்கி விமானத்தில் பறந்தேன். ஐந்தரை மணி நேரப் பயணம். நமது இந்தியாவில் டெல்லியிலும் சென்னையிலும் கடிகாரத்தில் ஒரே நேரம்தான்.

இந்தியாவைவிட பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் நேரமும் சிகாகோ மாநிலத்தின் நேரமும் மாறுபடும். விமான நிலையத்தில் சிகாகோவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் வரவேற்றோர். சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோ விமானநிலையத்திலும் அமெரிக்கவாழ் தமிழர்கள் திரண்டிருந்தனர். தமிழர்களுக்கேயுரிய பாரம்பரிய உடையுடனும், தமிழர்களின் கலையான பறை இசை, பண்பாட்டு நடனம் என அவர்கள் அளித்த வரவேற்பு, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

* தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்கு அகலமான வாசலைத் திறந்து வைத்த சான் பிரான்சிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சி

The post அமெரிக்க பயண சிறகுகள்-1 முதலீடுகளை ஈர்க்க பெரும் நம்பிக்கை அளித்த பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: