×

சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் பாலியல் பேச்சும்… மகாவிஷ்ணுவின் லீலையும்… பரபரப்பு தகவல்கள்

* பெண்கள் பள்ளிகளை குறிவைத்தது ஏன்? சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா வரை கிளைகள் எப்படி?

ஆன்மிகத்தில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை தற்போது பலர் காசாக்கி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்தால் இப்படியும் மக்களை ஏமாற்ற முடியுமா? என்று தோன்றும். அந்த அளவுக்கு மக்களை மயக்கி பணம் சம்பாதிப்பவர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். தங்களது கவர்ச்சிகரமான பேச்சால் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் குடும்ப பிரச்னைகளுக்கு விடை சொல்வது, தாம்பத்ய குறைபாட்டுக்கு ஆலோசனை சொல்வது என பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி முகம் சுழிக்க வைக்கிறது.

அப்படிப்பட்டவர்கள் போலீசில் சிக்கிய சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் போலீசில் சிக்கியிருப்பவர் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரும், மூட நம்பிக்கை பேச்சாளருமான மகாவிஷ்ணு. சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு பேசினார். அப்போது அவரது பேச்சுகள் மற்றும் கருத்துக்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது. மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் நோக்கிலும் இந்த பேச்சு அமைந்தது.

இதனால் அந்த பள்ளியை சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரிடம் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காமல், தொடர்ந்து மாணவிகள் முன்பு மகாவிஷ்ணு கெத்து காட்டி பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. போலீசுக்கும் புகார்கள் சென்றது.

அதன் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் காவலில் எடுத்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காவலில் எடுக்கப்பட்ட மகாவிஷ்ணுவை போலீசார் விசாரணைக்காக திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள குளத்துப்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் 5.30 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது மகா விஷ்ணுவின் பேச்சு தொடர்பாக வீடியோக்கள் போலீசாரிடம் சிக்கியது.

அதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு: மதுரையை பூர்வீகமாக கொண்ட மகாவிஷ்ணு தனியார் நிகழ்ச்சிகளில் ஆரம்ப காலங்களில் காமெடி செய்பவராக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு அதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நினைத்து அவருக்கு அதுவும் கைகொடுக்கவில்லை. எனவே, யூ டியூப் தொடங்கி அறிவுரைகள் கூறுவது போன்ற வீடியோக்களை முதலில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.

பின்னர்தான் அவர் ஆன்மிகத்தை கையில் எடுத்து பேச்சாளராக தன்னை காட்டத்தொடங்கியிருக்கிறார். தனது பேச்சாற்றலை மூலதனமாக வைத்து மகாவிஷ்ணு தன்னை மிகப்பெரிய ஆன்மிக பேச்சாளர் என அனைவரும் நம்பும் வகையில் பேசி வந்துள்ளார். பல இடங்களில் சொற்பொழிவாற்ற சென்றிருக்கிறார். அந்த சொற்பொழிவுகளை வீடியோக்களாக்கி அதனை யூ டியூப்பில் பதிவிட்டார். ஆன்மிகம், புத்துணர்ச்சி, அறிவுரை என்ற கோணத்தில் பேசும் இவரது பேச்சுக்கள் அனைத்துமே வக்கிரமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் கைகளில் சிக்கியுள்ள பல வீடியோக்கள் முகம் சுழிக்கும் வகையில், பொது இடத்தில் பேசக்கூடாத வகையில் இருந்திருப்பது தெரியவந்தது. அவற்றில் ஒரு வீடியோவில் பேசியுள்ள மகாவிஷ்ணு பலருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் தவறில்லை. இது இயற்கையானது என கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் கணவன் அல்லது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இப்படி பொது வெளியில் பேசுகிறோம் என்று எண்ணாமல் இவரது பேச்சு ஆபாசமாகவே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவருக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் குறைந்ததாக தெரிகிறது. எனவே, மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய மகாவிஷ்ணுவுக்கு அங்கும் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. படம் ஒன்றை இயக்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காதது மற்றும் சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தால் மீண்டும் பணம் சம்பாதிக்க வேறு முடிவு எடுத்தார்.

அதுதான் அறக்கட்டளை தொடக்கம். கொரோனா காலகட்டத்தின்போது இது தொடங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் தொடங்கினால் வருவாய் கிடைக்காது என நினைத்த அவர் திருப்பூரை தேர்வு செய்துள்ளார். காரணம் பனியன் தொழில் நிறுவனங்கள் மற்றும் கோவை போன்ற பெரு தொழில்நகரங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் பணம் பெறுவது சுலபமாக இருக்கும் என்பதுதான். எனவேதான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் அறக்கட்டளையை தொடங்கியிருக்கிறார். அவரது பரம்பொருள் அறக்கட்டளை வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறது.

இந்த பகுதியில் தியான ஆசிரமம், சமையல் அறை உள்ளிட்டவைகளை அமைத்தார். தினமும் சாப்பாடு தயார் செய்து வழங்கி வந்துள்ளார். இதன் வாயிலாக தனது அறக்கட்டளையை பிரபலப்படுத்திய மகாவிஷ்ணு அந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு வழங்க வேண்டும் என பணம் வசூல் செய்துள்ளார். இதன்முலம் வருவாய் அவருக்கு அதிகமாக கிடைத்தது. மேலும் பணம் சம்பாதிக்க ஆன்மிக வகுப்புகள் மற்றும் தியான வகுப்புகள் எடுத்துள்ளார்.

அவரது பேச்சை பொதுமக்கள் நம்பும் வகையில் தங்களது ஆதரவாளர்களை கூட்டத்தில் பொதுமக்கள்போல் அமரவைத்தும் மாஸ் காட்டி உள்ளார். கடவுள் அவதாரம் என்று சொல்லி கொண்டு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய நித்யானந்தா போல் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் மகா விஷ்ணு உலா வந்து உள்ளார். அவரை போலவே பெண் சிஷ்ய கோஷ்டிகளை சுற்றி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த மகா விஷ்ணு, பெண்கள் பள்ளிகளை குறிவைத்து ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகளை மூளைச்சலவை செய்து தன்பக்கம் இழுத்து வந்து உள்ளார்.

இதன் மூலம் இவருக்கு பெண் சிஷ்ய கோஷ்டிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. வகுப்புகளுக்கு செல்கிறவர்களை கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பெண்களுடன் நடனமாடி மூளைச்சலவை செய்ததாகவும் கூறப்படுகிறது. இவரது ஆதரவாளர்கள் தான் கூறிய கருத்துக்களை பின்பற்றியதால் தற்போது நலமாக இருப்பதாக கூற வைத்து பலரையும் நம்ப வைத்துள்ளார். தொழில் நிறுவனங்களை குறி வைத்த அவர், நிறுவனங்களில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் எடுப்பதாகக் கூறி, அதற்கு ஒரு தொகையை வசூலித்துள்ளார்.

இவரை நம்பிய பலரும் பணத்தை கொடுத்து நிறுவனங்களுக்கு பேச அழைத்துள்ளனர். இவ்வாறு பிரபலமான மகாவிஷ்ணு சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிளையை தொடங்கினார். வெளிநாடுகளில் பாலியல் ரீதியான கருத்துக்களையே பேசியுள்ளார். வெளிநாடுகளிலும் பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அங்கு ஆன்மிக வகுப்புகள் என கூறி ஒருவருக்கு கட்டணமாக ரூ.20 ஆயிரம் வரை வசூலித்துள்ளார். வெளிநாடுகளில் பாலியல் ரீதியான கருத்துக்கு வரவேற்பு கிடைக்கவே தன்னை மிகப்பெரிய ஆன்மிக அறிவுடையவர் என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார். வெளிநாடுகளில் அதிக பணம் கிடைத்தது.

இதனால் தன்னை கடவுளின் அவதாரம் என கூறி வந்துள்ளார். அவிநாசி அறக்கட்டளை அலுவலகத்தை காண்பித்து அதன் முலம் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருவதாக கூறி நிதி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பேச்சை நம்பிய வெளிநாட்டினர் பலரும் நிதி கொடுத்து உதவியதாக தெரிகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து நிதி எப்படி, எப்போது வந்தது? நன்கொடை கொடுத்தவர்கள் விவரம்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து ஆதாரங்களை தற்போது போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

* ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை
பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்கிற மகாவிஷ்ணு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்துள்ளார். இதனை தனக்கு எனக்கூறாமல் அறக்கட்டளை வாயிலாக பலருக்கு தினமும் உணவு அளிப்பதாகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் கூறி வசூலித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளின் பின்புலத்திற்கு ஏற்றபடி பணத்தை அவர் வசூலித்துள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் தனித்தீவு
திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா இன்று தனித்தீவு வாங்கி கைலாசா என்ற தனிநாட்டையே அமைத்துவிட்டதாக கூறுகிறார். குருநாதர் எவ்வழியோ சிஷ்யரும் அவ்வழியே என்பதுபோல், மகா விஷ்ணுவும் ஆஸ்திரேலியாவில் ஒரு தனித்தீவையே வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

* பணம் கொடுத்து கூட்டம்
மகாவிஷ்ணு தான் நடத்துகிற ஆன்மிக கூட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு சூட்சமங்களை வைத்துள்ளார். அதாவது நிகழ்ச்சிகளில் ஆரம்ப காலங்களில் பங்கேற்றவர்களில் பலரை பணம் கொடுத்து அழைத்து வந்து போலியாக கூட்டத்தை காட்டியுள்ளார். கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து நம்பிக்கை ஏற்பட்ட பலரும் அவரது சொற்பொழிவுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

* சிக்கிய ஆவணங்கள்
மகாவிஷ்ணு அறக்கட்டளையில் சைதாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையின்போது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

* காணொலி வீடியோக்கள் ஆய்வு
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக தற்போது பலரும் புகார்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர் பேசிய காணொலி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் பேசிய வீடியோக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான வீடியோக்களில் பாலியல் கருத்துக்களே உள்ளது. இதனால் அவர் எந்தெந்த பள்ளிகளில் இதுபோல் பேசியுள்ளார் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரை பள்ளிக்கு பேச அழைத்தவர்கள் யார் எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

The post சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் பாலியல் பேச்சும்… மகாவிஷ்ணுவின் லீலையும்… பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Maha Vishnu ,Singapore ,Sri Lanka ,Australia ,
× RELATED எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் : மகாவிஷ்ணு