×

தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர தொடங்கியது. தினம் தினம் புதிய உச்சத்தையும் தொட்டது. கடந்த ஜூலை 17ம் தேதி ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்பனையானது. இது, தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள்ளாக்கி வந்தது. இந்நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை எப்படி ஏறியதோ? அதே வேகத்தில் குறைந்ததை காண முடிந்தது. இந்த ஆறுதல் என்பது சில நாட்கள் மட்டுமே நீடித்தது.

மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,865க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,920க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தின் மூலம் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் திருமணம் உள்ளிட்ட விஷேசம் மற்றும் பண்டிகை காலத்திற்காக தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்...