×

ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு: விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி

சென்னை: ஒன்றிய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை 22 சதவீதம் உயர்த்தியதையடுத்து எண்ணெய் ரகங்களின் விலை திடீரென லிட்டருக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமையலில் எண்ணெய் பயன்பாடு பிரதானமான ஒன்றாக திகழ்கிறது. சமையல் எண்ணெய்களை பொறுத்தவரை 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய், உக்ரைன், ரஷ்யா, ருமேனியாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய் மாதந்தோறும் 15 லட்சம் டன் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், பாமாயில் மாதந்தோறும் 4 லட்சம் டன்களில் இருந்து படிப்படியாக அதிகரித்து 7.80 லட்சம் டன் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்கான வரியை 13.75 சதவீதத்தில் இருந்து 35.75 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதிக்கான வரியை 5.5ல் இருந்து 27.5 சதவீதமாகவும் ஒன்றிய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. தற்போது 15 கிலோ பாமாயில் டின் ரூ.1,560க்கு விற்பனையாகி வருகிறது. வரி விகிதம் உயர்வால் பாமாயில் டின்னுக்கு ரூ..400 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு ரூ.25 அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தர வீடுகளில் பாமாயில் எண்ணையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பாமாயில் விலை உயர்ந்தால் மாத பட்ஜெட் எகிறுமென பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் எண்ணெய் மற்றும் புண்ணாக்கு விற்பனையாளர் சங்க தலைவர் சாவி.நாகராஜன் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் இருந்து வரும் நிலக்கடையில் எண்ணெய் சத்து அதிகம் உள்ளது. அதனால் வடமாநில நிலக்கடலைக்கு மவுசு அதிகம். தற்போது குஜராத், ராஜஸ்தான் மற்றும் வடமாநிலங்களில் நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையிலும், இறக்குமதியை குறைக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் பாமாயில் 15 கிலோ ரூ.1,200 என்ற விலையில் இருந்தது. ஏற்றுமதி நாடுகளின் வரி அதிகரிப்பால் 15 கிலோ பாமாயில் ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால், பாமாயில் ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் ஏற்றுமதி சரியும். இதனால் அந்நாடுகள் ஏற்றுமதி வரியை குறைக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏற்றுமதி வரியை குறைத்தால் பாமாயில் விலை உயராது’’ என்றார்.

இதுகுறித்து சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கத்தலைவர் சந்திரதாசன் கூறியதாவது: ஒன்றிய அரசு, ெபாதுமக்கள் உபயோகிக்கும் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதால், விலையும் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது லிட்டர் ரூ.110க்கு விற்கும் சன்பிளவர் ஆயில் ரூ.130க்கும், ரூ.95க்கு விற்கும் பாமாயில் ரூ.115க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் தசரா, தீபாவளி போன்ற பெரிய அளவிலான பண்டிகைகள் வரவுள்ளது. இந்த நேரத்தில், பலகாரங்கள் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

இந்த திடீர் விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும். எண்ணெய் ரகங்களின் விலை உயர்வு என்பது, மக்களின் அத்தியாவசிய தேவையான பல்வேறு உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்து விடும். எண்ணெய் வித்து பயிரிடும் விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்காக இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த வகையில் விவசாயிகளுக்கு சிறுநன்மை கிடைத்தாலும், நுகர்வோராகிய மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும் என்பது உண்மை என்றார்.

இது குறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. டோல்கேட் வரி உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. தற்போது ஒன்றிய அரசு தாறுமாறாக விதித்துள்ள ஜிஎஸ்டி வரியால், உணவுப்பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எண்ணெய் ரகங்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளனர். இதன் காரணமாக லிட்டருக்கு ரூ.25வரை அதிகரித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்படும்’’ என்றனர்.

The post ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு: விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : EU ,Chennai ,EU government ,Dinakaran ,
× RELATED விலைவாசி உயர்வு; ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: முத்தரசன்