×

சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு

டெல்லி: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75%லிருந்து 35.75%ஆக உயர்ந்துள்ளது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆக உயர்த்தியுள்ளது. பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.25 வரை உயரும் என எண்ணெய் விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மத்திய அரசு இறக்குமதி வரியை நிர்ணயம் செய்துள்ளது. இந்த இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு பொருட்களுக்கும் மாறுபடும்.

குறிப்பாக சமையல் எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகில் அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தாவரங்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய் வித்துகளின் வழியாக உற்பத்தியாகும் சமையல் எண்ணெயின் (Vegetable Oil) தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் இருந்து அதிகளவில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதேபோல் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமனின் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிப்பில், ‛‛Crude வகை சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு என்பது நேற்று வெளியானது. இந்த வரி உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் இந்த முடிவு என்பது எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் சோயாபீன் விவசாயிகள் அதிகம் உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா விவசாயிகளை மனதில் வைத்து இந்த இறக்குமதி வரி என்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டில் சமையல் எண்ணெய்க்கான எண்ணெய் வித்துகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் பொதுமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெயின் அளவு குறையும்.

இதனால் உள்நாட்டில் உள்ள சமையல் எண்ணெய் வித்துகளுக்கு மவுசு கூடி அவர்களுக்கு லாபம் கிடைக்கும். இதனால் தான் தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குதி வரி என்பது 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி உயர்வு என்பது விவசாயிகளுக்கு லாபமானதாக மாறினாலும் கூட சமையல் எண்ணெய் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

அதாவது வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி குறையும்படி தானாகவே அதன் விலை என்பது உச்சம் தொடலாம். அதன்படி ரூ.25 வரை சமையல் எண்ணெய் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் இந்த 3 வகையான எண்ணெயின் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…....