×

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை: கூண்டு கிளியாக சிபிஐ செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஜூலை 12ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கில் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, அவரை கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்ததால், கெஜ்ரிவால் வௌியே வர முடியாத சூழல் உள்ளது.

சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராகவும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 5ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வு நேற்று தனித்தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய தீர்ப்பில் , ‘‘டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. அவர் பிணைத் தொகையாக ரூ.10லட்சத்தை செலுத்த வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக பொதுத்தளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எதையும் பேசக்கூடாது.

வழக்கில் விலக்கு அளிக்கப்படாத வரையில் விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீண்ட காலமாக சிறையில் வைத்து இருப்பதை நியாயப்படுத்த முடியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விசாரிக்க வேண்டும். அது உடனடியாக முடிவடைய சாத்தியம் கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததில் எந்தவிதமான விதிமுறை மீறல்களும் இல்லை என்பதால், அதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.என்று தெரிவித்தார்.

நீதிபதி உஜ்ஜல் புயான் வழங்கிய தீர்ப்பில், “இந்த விவகாரத்தில் சிபிஐ கைது நடவடிக்கை என்பதை தவிர, அதற்கான அவசியம் மற்றும் தேவை என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதில் சிபிஐயின் நடவடிக்கை என்பது ஜாமீன் கேட்பவரை விரக்தி அடைய செய்யும் விதமாக இருந்துள்ளது. குறிப்பாக கடந்த 2023ல் கைது வேண்டாம் என நினைத்த சி.பி.ஐ அமைப்பு தற்போது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது பல கேள்விகளையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது கைதுக்கான காரணத்தை சி.பி.ஐ தரப்பு ஒரு இடத்தில் கூட வாதங்களாக முன்வைக்கவில்லை. எனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த கைது நடவடிக்கை என்பது தேவையற்றதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. மேலும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் சம்மந்தப்பட்ட நபரை விடுவிக்காமல் இருக்க சி.பி்.ஐ உடனடியாக அவருக்கு எதிராக கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது மேலும் அவருக்கு ஏமாற்றத்தை அளித்ததை தெளிவுபடுத்தி காட்டியுள்ளது.

குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் இருக்கும்போது, அவரை சி.பி்ஐ கைது செய்தது என்பது அரசியல் சாசன சட்ட விதிகள் மற்றும் நீதி ஆகியவற்றை கேலி கூத்தாக்குவது போன்றதாக அமைந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய தீர்ப்போடு நான் ஒத்துபோவதால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குகிறேன். ஒரு வழக்கில் சிபிஐ விசாரணை அமைப்பு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்ற எண்ணத்தை விசாரணை அமைப்பு மாற்ற வேண்டும். அதேப்போன்று சி.பி.ஐ அமைப்பு என்பதும் கூண்டில் அடைக்கப்படாத மற்றும் அடைக்க முடியாத கிளி என்பதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.  இதில் இரு நீதிபதிகளும் தனித்தனியான உத்தரவை பிறப்பித்தாலும், இருவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த

வழக்கில் ஜாமீன் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு விசாரணை அமைப்புகளும் தொடர்ந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து அவர் திகார் சிறையில் இருந்து நேற்று மாலை வெளியில் வந்தார்.

* தேசவிரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்
டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்கள் முன்பு கெஜ்ரிவால் பேசியதாவது: என்னுடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். என்னை வரவேற்க மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்ததற்கு நன்றி.

எனது ஒவ்வொரு துளி இரத்தமும் எனது தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில், நான் சிரமங்களை எதிர்கொண்டேன். கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என் உறுதியை உடைக்க அவர்கள் என்னை சிறையில் அடைத்தனர். ஆனால் எனது உறுதி மேலும் வலுப்பெற்றுள்ளது. சிறைகளால் என் உறுதியை உடைக்க முடியாது. தேச விரோத சக்திகளுக்கு எதிரான எனது போராட்டத்தை நான் தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கில் இதுவரை ஜாமீன் பெற்றவர்கள்

* டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

* ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்கு ஏப்ரல் 2ம் தேதி ஜாமீன்.

* டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி ஜாமீன்.

* பி.ஆர்.எஸ் தலைவர் கவிதாவுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி ஜாமீன்.

* அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய ஏழு நிபந்தனைகள்

* வழக்கில் ஜாமீன் பெற்ற போதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகத்திற்கு செல்லக் கூடாது

* டெல்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரப்பூர்வ அரசு கோப்புகளில் கையெழுத்திட அனுமதி இல்லை

* டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கு மற்றும் வழக்கின் விசாரணை அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது

* வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை சந்திக்கவோ அல்லது அவர்களுடன் உரையாடவோ கூடாது.

* விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நீதிமன்றத்தால் விலக்கு அளிக்கப்படவில்லை என்றால், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்.

* ஜாமீன் பெறுவதற்கான பிணைத்தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்

* உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்பட்டுள்ள ஜாமீன் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் நீட்டிக்க படலாம் அல்லது திரும்ப பெறப்படவும் அனுமதிக்கப்படுகிறது.

* கெஜ்ரிவால் ஜாமீன் தலைவர்கள் கருத்து
கர்நாடகா முதல்வர் சித்தாராமைய்யா; கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சிறையில் இருந்து விடுவித்த உத்தரவு நாட்டின் நீதித்துறை மீது எங்களின் நம்பிக்கையை மேலும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த உத்தரவு உண்மை மற்றும் நீதிக்காக போராடும் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது. இது அரசியல் சாசன அமைப்புக்களை தங்களது அரசியல் விரோதிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கான கண்டிப்பு. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான்; இறுதியில் உண்மை வென்றது.

கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனானது உண்மையை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை காட்டுகின்றது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா; உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமல்ல, பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தனது சர்வாதிகாரத்தை நிறுத்திக்கொள்வதற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள மிகப்பெரிய செய்தியாகும். முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா; ஆம் ஆத்மி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். வலுவாக இருப்பதற்கு பாராட்டுக்கள். நமது மற்ற தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்படவும் வாழ்த்துகிறேன்.

* கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்
டெல்லியில் பேசிய பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீனை மட்டுமே வழங்கியுள்ளதால் தொடர்ந்து அவர் குற்றவாளியாகவே கருதப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படவில்லை அல்லது அவர் விடுவிக்கப்படவில்லை. கெஜ்ரிவால் சிறையில் இருந்த முதல்வராக இருந்து ஜாமீனில் வந்த முதல்வராகி உள்ளார்.

ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்று விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டிய இந்த ஊழல் முதல்வருக்கு என்ன செல்வாக்கு, புகழ் மற்றும் அந்தஸ்து இருக்கிறது. இதனை டெல்லி மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் அவரை ராஜினாமா செய்யக்கோரும் காலம் வரும்” என்றார்.

The post புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை: கூண்டு கிளியாக சிபிஐ செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Supreme Court ,CBI ,New Delhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Tihar Jail ,Dinakaran ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...