×

இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு

கும்பகோணம்: ‘இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியாக விளங்குகிறது’ என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்-கும்பகோணம்-விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உலக அளவில் வாகன உற்பத்தியில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதில் இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் விளங்குகிறது. வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி 4 ஆண்டுகள் காலதாமதமாகி உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். தமிழகத்தில் சாகுபடி நிலங்கள் அதிகளவில் உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்த முடியவில்லை. தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் மேலும் பல சாலை திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

தஞ்சாவூர்-அரியலூர்-பெரம்பலூர் ஆகிய மாநகரங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டத்தின் மூலம் சிமெண்ட் ஆலைகள் உள்ள பகுதிகள் வளம் பெருகும். குறிப்பாக, தஞ்சாவூர் சுற்றுலாத்துறையில் வளர்ச்சி பெறும். தஞ்சாவூரில் புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனால் தஞ்சாவூர் சுற்றுலாத்துறையில் மேலும் வளர்ச்சி பெறும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் குறிப்பாக தொழில் மாநகரங்களை இணைக்கும் வகையில் விழுப்புரத்திலிருந்து பெங்களூர் வரை 180 கிலோ மீட்டர் தொலைவிற்கு 5,400 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.

சென்னை-கல்பாக்கம்-மகாபலிபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் உருவாக்கப்படும். பெங்களூரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு நிதி ஒரு பொருட்டல்ல. சாலை பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் தான் சாலை பணிகள் காலதாமதம் ஆகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி தருகின்றன. அதனால் அந்த பகுதிகளில் சாலைப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,Tamil Nadu ,India ,Kumbakonam ,Union Road Transport ,Highways Minister ,Thanjavur- ,Vikravandi ,
× RELATED ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து...