×

வீடியோவை பாஜவினர் வெளியிட்ட விவகாரம் ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி நிர்மலா சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பாஜவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக லண்டனில் இருக்கும் தமிழக பாஜ மாநில் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வணிக உரிமையாளருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட சந்திப்பை பாஜவினர் வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

* கவர்னருடன் வானதி திடீர் சந்திப்பு
அன்னபூர்ணா உரிமையாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் விளக்கமளித்தார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென கவர்னரை வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், கோவை ஓட்டல் உரிமையாளர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

* கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில், கோவை மாநகராட்சி 5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசுகையில், ‘‘கோவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தொழில்முனைவோர் கருத்தரங்கில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி ஜனநாயக முறையில் பேசினார். ஆனால், அவரை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது அறைக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அத்துடன், அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது, ஜனநாயக விரோதம். அன்னபூர்ணா ஓட்டல் கோவையின் அடையாளம். ஒன்றிய நிதியமைச்சர் அவரை அவமானப்படுத்துவதும், கோவை மக்களை அவமானப்படுத்துவதும் ஒன்றுதான். எனவே, ஒன்றிய நிதியமைச்சருக்கு இந்த மாமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது’’ என்றார். இவரது பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

The post வீடியோவை பாஜவினர் வெளியிட்ட விவகாரம் ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Annapurna ,Srinivasan ,Nirmala Srinivasan ,Nirmala Sitharaman ,
× RELATED அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன்...