×

சுவிட்சர்லாந்தில் வங்கிக் கணக்கில் அதானி குழுமத்தின் ரூ.2,610 கோடி முடக்கம்: ஹிண்டன்பர்க் தகவலால் பரபரப்பு

புதுடெல்லி: முறைகேடு குற்றச்சாட்டில் கோர்ட் உத்தரவுப்படி சுவிட்சர்லாந்தில் அதானி குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய தைவானைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இந்த கணக்குகளில் ரூ.2,610 கோடி இருந்ததாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து அவ்வப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டது. இதனால் அதானி பங்குகள் மதிப்பு கடும் சரிவை சந்தித்தன. இதுபோல், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டை இதே நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த வரிசையில், சுவிட்சர்லாந்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடையவரின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.2,610 கோடியை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கோதம் சிட்டி என்ற செய்தி நிறுவனம், சுவிட்சர்லாந்து குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பண பரிவர்த்தனை முறைகேடு மற்றும் பங்கு மோசடிகளில் ஈடுபட்டதற்காக அந்த நாட்டில் உள்ள அதானி குழுமத்தின் பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்குகளில் இருந்த மொத்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2,610 கோடி. கிரிமினல் கோர்ட் உத்தரவுப்படி 2021ம் ஆண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து அதானி குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. மேற்கண்ட நீதிமன்ற உத்தரவுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

அதில் எங்கள் குழும நிறுவன பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட ஆணையம் அல்லது அமைப்பில் இருந்து இது தொடர்பான விளக்கமும் எங்களுக்கு வரவில்லை. எங்கள் குழும பெயரை கெடுக்கும் முயற்சி இது எனத் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் இதனை மறுத்திருந்தாலும், மேற்கண்ட முறைகேடு விவகாரத்தில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், தைவானை சேர்ந்த சங் சுங் லிங்கிற்கு தொடர்புடையது. இவருக்கும் அதானி குழுமத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு அதானி குழும பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தை ஹிண்டன்பர்க் வெளியிட்டபோதே, சங் சுங் லிங் பெயர் அடிபட்டது. இவர் வெளிநாட்டு நிதி மூலம் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து லாபம்ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதானி குழுமம் இந்தோனேஷியாவில் இருந்து அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததாக காட்டி நடந்த முறைகேட்டிலும் சாங் சுங் லிங்கிற்கு தொடர்பு உள்ளது. இவர் அதானி குழுமங்கள் பலவற்றில் இயக்குநராக இருந்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் விவகாரத்திலும் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் விசாரணை
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், ‘‘அதானி குழுமத்தின் ரூ.2610கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதானி குழும மோசடி குறித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும், அதானி மெகா ஊழல் முழுவதையும் விசாரிப்பதற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனடியாக கூட்டுவதும் இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சுவிட்சர்லாந்தில் வங்கிக் கணக்கில் அதானி குழுமத்தின் ரூ.2,610 கோடி முடக்கம்: ஹிண்டன்பர்க் தகவலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Switzerland ,Hindenburg ,New Delhi ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...