×

உ.பி.யில் தான் இந்த கூத்து பள்ளிக்கு மட்டன் பிரியாணி கொண்டு வந்த மாணவன் டிஸ்மிஸ்: தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை

அம்ரோஹா: உபியில் மதியம் சாப்பிட மட்டன் பிரியாணி கொண்டு சென்ற பள்ளி மாணவன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் ஹில்டன் பப்ளிக் பள்ளி உள்ளது. அங்கு இறைச்சி உணவு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதிய உணவு சாப்பிட 7 வயது மகனுக்கு மட்டன் பிரியாணி கொடுத்திருக்கிறார் தாய்.

இதையடுத்து, அந்த மாணவன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவனின் தாய்க்கும் பள்ளி முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் காணொலியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இதனால் உணவு பழக்கவழக்கங்களை வைத்து பள்ளியில் பாகுபாடு காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. பிரச்சினை பூதாகரமாகி மாநில பள்ளிக்கல்வித் துறையின் கவனத்துக்குச் சென்றது.

இதன் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் விசாரணை நடத்தியது. நடந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது தவறில்லை என்று நிர்வாக விளக்கம் அளித்தது. இருப்பினும் விசாரணை முடியும் வரை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. சம்மந்தப்பட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற தேவையான உதவியை அரசு தலையிட்டு வழங்கும் என்று அம்ரோஹா மாவட்ட கல்வி ஆய்வாளர் விஷ்ணு பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாணவன் இதுவரை படித்துவந்த ஹில்டன் பப்ளிக் பள்ளியின் கல்விக் கட்டணத்தில் பாக்கி வைத்திருந்த ரூ.37,000 தொகையை மாணவனின் பெற்றோர் செலுத்தத் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இந்தவிவகாரம் குறித்து கலெக்டர் விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) உத்தரவிட்டுள்ளது. ஹில்டன் கான்வென்ட் பள்ளியின் முதல்வர் அவ்னிஷ் குமார் ஷர்மாவும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post உ.பி.யில் தான் இந்த கூத்து பள்ளிக்கு மட்டன் பிரியாணி கொண்டு வந்த மாணவன் டிஸ்மிஸ்: தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : mutton biryani ,UP ,National Children's Commission ,Amroha ,biryani ,Hilton Public School ,Amroha district ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு