×

5 மாதங்களுக்கு பிறகு விடுதலையாகிறார் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே செயலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்தது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமலாக்க துறை முதலில் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த ஜாமீனை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் நாடிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்த போதிலும் அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம் மதுபான கொள்கை ஊழல் வழக்கை கையில் எடுத்த சிபிஐ போலீசார், ஜூலை 2வது வாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதனால் ஜாமின் கிடைத்தும் அவர் சிறையிலேயே இருந்து வந்தார்.

அதேநேரம், சிபிஐ கைதை எதிர்த்தும், ஜாமின் வழங்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் , உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு பல நாட்களாக விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 5ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது சிபிஐயின் அவசர அவசரமான நடவடிக்கையாக இருக்கிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி வழங்கிய ஜாமின் தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐ தொடர்ந்த வழக்கிலிருந்தும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் 176 நாட்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார். ஐந்து மாதங்களுக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 5 மாதங்களுக்கு பிறகு விடுதலையாகிறார் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Supreme Court ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,CPI ,Yes Atmi Party ,Dinakaran ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...