×

களையிழந்த ஓணம் பண்டிகை; சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சங்கரன்கோவில்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்தது. இதனால் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாகர்கோவில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் வணிகம் நடக்கும் பூ மொத்த மார்க்கெட் சங்கரன்கோவில் மார்க்கெட் ஆகும். இங்கு தினமும் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த மல்லிகை பூ, பிச்சிப்பூ, கேந்தி, வாடாமல்லி, கனகாம்பரம், துளசி உள்ளிட்ட பல்வேறு பூக்களை கொண்டு வந்து ஏலம் விடப்படுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் கலந்து கொள்கின்றனர். சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் காலை 7 மணிக்கு மேல் ஏலம் தொடங்கும். சங்கரன்கோவில் பூ மொத்த மார்க்கெட்டில் இருந்து காலை 11 மணிக்குள் கேரளாவுக்கு பூக்கள் தினமும் அனுப்பி வைக்கப்படுகின்றது. அதற்கு மேல் விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை சுற்று வட்டாரபகுதியில் உள்ள சில்லறை பூ வியாபாரிகள் வாங்கி செல்வர். மீதமான பூக்கள் வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கி விட்டாலே சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இருந்து ஓணம் பண்டிகையொட்டி 10 நாட்களுக்கு மேல் தினமும் ஆயிரக்கணக்கான எடையுள்ள பூக்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே கேரள அரசு ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று அறிவித்திருந்தது. அதன்விளைவாக நேற்று வரை கேரளாவுக்கு ஓணம் பண்டிகைக்காக செல்லும் பூக்களின் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. பொதுவாக ஓணம் பண்டிகை நேரங்களில் மல்லிகைப்பூ எடை ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை நிர்ணயிக்கப்படும்.

ஆனால் தற்போது ஓணம் பண்டிகை பூக்கள் விற்பனை இல்லாததால் காலை 11 மணிக்குள் வரும் மல்லிகை பூ ரூ.340க்கும், மற்ற பூக்களின் விலை ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. காலை 11 மணிக்கு மேல் மல்லிகை பூ ரூ.200 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை விற்பனை நடைபெறாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பூ ஏலக்கடை நடத்தி வருபவர்கள் கூறுகையில், ‘ஓணம் பண்டிகை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் நடைபெறும் பூக்கள் விற்பனை தற்போது நடைபெறவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓணம் பண்டிகை நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் பூக்கள் விற்பனை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

 

The post களையிழந்த ஓணம் பண்டிகை; சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Weed-out festival ,Sankaranko ,ONAM FESTIVAL ,KERALA ,Sankaranco ,Dhawale Flower Market ,Nagarko, Tamil Nagar ,Weedy Onam Festival ,Dinakaran ,
× RELATED ஓணம் பண்டிகை: மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு