×

மனத் தெளிவிற்கு தீர்வு வேண்டும்!

ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்துவிட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. நாட்கள் செல்லசெல்ல மன்னனால் தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை. தேகம் மெலியத்தொடங்கியது. தூர தேசத்திலிருந்து ஞானி ஒருவர் வந்து சேர்ந்தார். மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.

‘‘இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, இங்கிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும். இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். இரண்டு நாட்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது. அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது. மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் ஞானி.

மன நிறைவோடும் சந்தோஷத்தோடும் நன்றி கூறியதுடன், நிம்மதியாகத் தூங்கினார், நன்றாகச் சாப்பிட்டார், பழைய பொலிவு திரும்பி விட்டது. தூர இடத்திலிருந்து வந்த ஞானிக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பிவைத்தார் அந்த மாமன்னன். நாட்டு எல்லையைத் தாண்டியதும் ஞானியின் சீடர்களில் ஒருவன் கேட்டான். ‘‘குருவே, அந்த அற்புதமான மூலிகைபற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’ எனக் கேட்க, ‘‘ஞானி புன்னகைத்தார்.’’ பூச்சி இத்தனை நாள் மன்னனின் செவிக்குள் இல்லை, அவரது மனதிற்குள்தான் இருந்தது. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மைதான்.

ஆனால் அது சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். அந்தச் சிறிது நேரத்தில் பூச்சி, மன்னனின் செவியை கடந்து மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆகவே, அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக்கொண்டிருந்தார்.‘‘குருவே, அதை விளக்கிச் சொல்லி மன்னனைக் குணப்படுத்தியிருக்கலாமே?’’ சீடனே, மனோவியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது! பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்கொண்டிருந்தார். அதனால்தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன். அதிகாலை நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில்விட்டு, ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.

மன்னன் நம்பிவிட்டான். அத்துடன் அவரதுமன நோயும் மாறியது.’’இன்று மனித இனத்தைப் பிடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் உடலில் அல்ல. மனதில்தான் இருக்கின்றன. இறைமக்களே, இன்று நம்மில் பலர் மனரீதியாக சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே நீங்கள் குறிப்பிடும் பூச்சி என்ற பிரச்னை காதில் இல்லை, மனதில்தான் இருக்கிறது.

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டு வெற்றி வாய்ப்புக்களை பலர் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘‘தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.’’ (ரோம.1:21) என்றும், ‘‘சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்: அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றும்கிடையாது’’ (நீதி.20:4) என்று இறைவேதம் கூறுகிறது. ஆகவே, காதில் பூச்சி என்று சொல்லி இல்லாததை உணர்ந்து, அழகிய காலத்தை வீணாக்காதீர்கள்.

தொகுப்பு : அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.

 

The post மனத் தெளிவிற்கு தீர்வு வேண்டும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வலதுகாலை எடுத்து வைத்து வா… வா…