×

மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு ஒரே வாரத்தில் சீல் வைக்கப்படும் : ஆட்சியர் சங்கீதா உறுதி!!

மதுரை : மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மகளிர் தங்கும் விடுதியில் இன்று காலை பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கிவந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மதுரை கட்ராபாளையத்தில் தீவிபத்து ஏற்பட்ட விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” விடுதியில் 2 பெண்கள் பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக விசாகா தங்கும் விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டடம் குறித்து வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். பழைய கட்டடங்கள் குறித்து நோட்டீஸ் அனுப்புகிறோம்; ஆனால் நீதிமன்றத்தில் தடை வாங்கி விடுகிறார்கள்; பதிவு செய்யாத விடுதிகளுக்கு நோட்டீஸ் அளித்து ஒரு வாரத்தில் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். உரிய அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தங்கும் விடுதிகள் 4 உதவி ஆணையர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு ஒரே வாரத்தில் சீல் வைக்கப்படும் : ஆட்சியர் சங்கீதா உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Madura ,Adysir Sangeetha ,Madurai ,governor ,Sangeetha ,Katrapalayam ,Madurai Periyar Bus Station Bridge ,
× RELATED மதுரையில் மிளகாய் பொடி தூவி கொத்தனார் கொலை