×

மூடநம்பிக்கை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவை விசாரணைக்கு திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்

சென்னை: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூரில் உள்ள பரம்பொருள் அலுவலகத்தில் வைத்து விசாரிக்க, சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்றுள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்தார்.  இதற்காக கடந்த செப்.7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனு மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தது. இந்த மனு மீது விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்டார்.

நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் முன்பு மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனை அடுத்து நேற்று விசாரணைக்கு சைதாப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாற்றுத் திறனாளிகள் குறித்தான இழிவாக பேசிய விடியோ வெளியிட்டது குறித்து விசாரிக்க திருப்பூரில் உள்ள பரம்பொருள் பவுண்டேசன் அலுவலகத்திற்கு சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். திருப்பூரில் விசாரணை முடிந்து நாளை மீண்டும் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வரவுள்ளனர்.

The post மூடநம்பிக்கை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவை விசாரணைக்கு திருப்பூர் அழைத்து சென்ற போலீசார் appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Tiruppur ,Chennai ,Chennai Saithapete Police Station ,Superintendent ,Mahavishnuwa ,Bharammal Foundation ,Ashok Nagar Government School ,Speaker ,
× RELATED சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்