×

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி டிஜி புதூர் காளியூர் தோப்பு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கே.கே.காளியப்பன் (77). இவர் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யும் ஆவார். தற்போதும் அதிமுகவில் பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த 9ம் தேதி ஈரோடு எஸ்பி ஜவகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபியில் தனியார் அறக்கட்டளை மூலம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி இப்பள்ளியின் தாளாளரான கோபி குள்ளம்பாளையத்தை சேர்ந்த வேலுமணி, அவரது நண்பரான கோபி கலிங்கியம் காமராஜ் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் என்னிடம் பள்ளியில் ஹெலிபேட் அமைக்க வங்கியில் கடன் பெற முயற்சி செய்து வருவதாகவும், தொகை கிடைக்க மூன்று மாதம் கால தாமதம் ஆகும் எனவும்,
எனவே, ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் அவர்களது பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறினர்.

உடன் இருந்த தட்சிணாமூர்த்தியும் தைரியமாக பணம் கொடுங்கள் என நம்பிக்கை ஏற்படுத்தினார். அதன்பேரில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி ஆகிய நாட்களில் வங்கி காசோலை மூலமாக ரூ.35 லட்சம் பெற்றுக்கொண்டனர். ரொக்கமாக ரூ.15 லட்சம் என என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிபடி என்னை அவர்களது பள்ளியில் பங்குதாரராக சேர்க்கவில்லை. எனவே, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்பி ஜவகர் பரிந்துரைத்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரணை நடத்தி, பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி மோசடி செய்த வேலுமணி, மில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவராஜ், வெங்கிடுசாமி ஆகிய 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Talalar ,Erode ,KK Kaliyappan ,Gobi DG Putur Kaliyur Thopp Thotam ,Erode district ,Dinakaran ,
× RELATED சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்