×

பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வட்டி இல்லா கடன்; ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி 5 உத்தரவாதங்கள்: காங்.தலைவர் அறிவிப்பு

அனந்தநாக்: ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்பது உள்பட 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி அனந்தநாக் பகுதியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘‘ சட்ட பேரவை தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். பெண் தொழில் முனைவோர்களுக்கு வட்டி இல்லாமல் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு, பொது விநியோக திட்டத்தின்கீழ் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட காஷ்மீரி பண்டிட் குடியேற்றவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்தரவாதங்களை அளிக்கிறேன்.

மேலும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை பெறுவார்கள். ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒன்றிய பாஜ அரசின் மூலம் நடத்தப்படும் மாநில நிர்வாகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். யூனியன் பிரதேசமான காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம்’’ என்றார்.

The post பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சம் வரை வட்டி இல்லா கடன்; ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி 5 உத்தரவாதங்கள்: காங்.தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir assembly ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Jammu and Kashmir Legislative Assembly elections ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் குடும்ப...