வாஷிங்டன்: சீனா உடனான எல்லைப் பிரச்னையை பிரதமர் மோடி சரியாக கையாளத் தவறிவிட்டார் என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, சீன ராணுவத்தால் 4,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது பேரழிவு என குறிப்பிட்டார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி வருகிறார். நேற்று அவர், வாஷிங்டனில் தேசிய பத்திரிகை மன்றத்தில் அளித்த பேட்டியில், ஒன்றிய பாஜ அரசின் வெளியுறவுக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனா உறவு குறித்து பேசினார். அதில் ராகுல் கூறியதாவது:
லடாக்கில் டெல்லி அளவுக்கான 4,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்து தனது படைகளை நிறுத்தி உள்ளது. இது மிகப்பெரிய பேரழிவு. உங்கள் நாட்டில் 4,000 சதுர கிமீ பகுதியை அண்டை நாடு ஆக்கிரமித்திருந்தால் அமெரிக்கா எப்படி நடந்து கொள்ளும்? எந்த அதிபரும் அப்பிரச்னையை நன்றாக கையாண்டதாக சொல்லிவிட்டு தப்பிக்க முடியுமா? எனவேதான், சீனா உடனான எல்லை விவகாரத்தை மோடி சரியாக கையாளவில்லை என்று கூறுகிறேன். எங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதியில் சீன துருப்புகள் அமர்ந்திருக்க எந்த காரணமும் இல்லை.
பாகிஸ்தானை பொறுத்த வரையில், அவர்கள் தீவிரவாத செயல்களை ஆதரிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். அதை அவர்கள் தொடரும் வரையிலும் எங்களுக்கு இடையேயான பிரச்னைகள் தீராது. எனவே, எங்கள் இரு
நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு காஷ்மீர் பிரச்னை எந்த விதத்திலும் காரணம் அல்ல. இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே சமயம், இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எதையும் இந்திய மக்களே முடிவு செய்ய வேண்டும்.
எங்கள் நாட்டில் ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது இந்தியாவின் போராட்டம். அதற்கு வேறு யாருடனும் தொடர்பு இல்லை. அது எங்கள் பிரச்னை. நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஜனநாயகத்தை நாங்கள் உறுதி செய்வோம்.
ஆனாலும், மற்ற ஜனநாயக நாடுகளை விட இந்தியா ஜனநாயகம் அளவில் பெரியது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலக ஜனநாயகப் பார்வையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய ஜனநாயகத்தை உலகின் சொத்தாகத்தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எந்த வகையான வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள். எனவே வங்கதேசத்தில் நிகழும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
The post 4,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவை மோடி சரியாக கையாளவில்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.