×

நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை மோதவிட்டு படகை கவிழ்த்த இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு

நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை மோதவிட்டு படகை கவிழ்த்த இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்திவேல்(40), தேவராஜ்(32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக்கேயன்(46), செருதூர் தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ்(36) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று மாலை கோடியக்கரை தென்கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வலையை விரித்து 4 மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கப்பலால் செருதூர் மீனவர்கள் பைபர் படகில் மோதிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் பைபர் படகு கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். அப்போது அருகே மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் சக்திவேல், தேவராஜ், கார்த்திக்கேயன் ஆகியோரை மீட்டனர்.

சதீஷை தொடர்ந்து தேடினர். தொடர்ந்து நள்ளிரவு சதீஷையும் மீட்டனர். பின்னர் சேதமடைந்த படகை தங்களது படகில் கட்டி, மீட்கப்பட்ட 4 மீனவர்களையும் செருதூருக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு அழைத்து வந்து கிராம பஞ்சாயத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதில் காயமடைந்த 4 மீனவர்களும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை மோதவிட்டு படகை கவிழ்த்த இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை மோதவிட்டு படகை கவிழ்த்த இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Nagai District ,Nagai ,Tharman ,Nakai district ,Cherudur ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!