×

ஈசிஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!

சென்னை : கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை, ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சார வாரியத்தின் பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரியத்தின், குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (11.09.2024) சென்னை, தலைமைச் செயலக அலுவலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அவர்கள், வருவாய்த்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இப்பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுரைகள் வழங்கினார். வருவாய்த்துறை அலுவலர்கள், எந்தெந்த புல எண்களில் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டிய புல எண்கள் ஆகியவற்றை கேட்டறிந்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகள், மேல்முறையீடுகள் போன்றவற்றை விரைந்து முடிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். அரசுப் புறம்போக்கு நிலங்களுக்கு முன்நுழைவு அனுமதி பெறப்பட்டுவிட்டதா? என்பதை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், கொட்டிவாக்கம் கிராமத்தில், 270 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிலுவையில் உள்ளது. இப்பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தனிக்கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

இயந்திர துளை(Machine Holes) அமைக்கும்போது, நெடுஞ்சாலைத்துறையுடன் ஆலோசனை செய்து, பணிகள் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்தில், 2.750 கிலோ மீட்டர் நிலஎடுப்பு நிலுவையில் இருப்பதாலும், மின்பெட்டிகள் மற்றும் புதை மின்வடங்கள் மாற்றியமைக்கும் பணிகள், பாதாளச்சாக்கடைப் பணிகள் போன்றவை முடிக்கப்படாமல் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இப்பணிகளை முடித்தப் பின்னர்தான் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பணிகள் நடைபெறும்போது, தேவையான சாலைகள் தடுப்பான்கள், முன்னெச்சரிக்கைப் பலகைகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களுடன் குழாய் பதிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலங்கவரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் முனைவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., சென்னை பெருநகர மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., நீலங்கரை உதவி காவல் ஆணையர் திரு.ஏ.பாரத், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) திரு.இரா.சந்திரசேகர், சென்னை பெருநகரத் தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.ஜவஹர் முத்துராஜ், சென்னை குடிநீர் வாரியம் தலைமைப் பொறியாளர் திரு.ஆர்.கண்ணன், சென்னை பெருநகரத்திட்ட வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் திரு.பா.பாஸ்கரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலஎடுப்பு சென்னை திரு.விஜயராஜ், சென்னை மின்சார வாரியம் செயற்பொறியாளர் திரு.ஏ.ராமு, சென்னை பெருநகர கோட்டப் பொறியாளர் திரு.ராஜகணபதி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

The post ஈசிஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiur ,Acre ,ECR ,Minister ,Chennai ,East Coast Road ,Electricity Board ,Chennai Drinking Water Board ,
× RELATED விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3...