×

பிரபல எலக்ட்ரானிக் ஷோரூம்களில் யுபிஐ கியுஆர் கோடு ஸ்கேன் செய்து ₹4 கோடி நூதன மோசடி

*ராஜஸ்தானை சேர்ந்த 13 பேர் கும்பல் கைது

திருமலை : பிரபல எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் பொருட்களை வாங்கிக்கொண்டு யுபிஐ மூலம் ₹4 கோடி நூதன மோசடி செய்த ராஜஸ்தானை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் முன்னணி வர்த்தக நிறுவனமாக உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் டிவி, வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்பட ஏராளமான பொருட்கள் விற்பனையாகிறது. இங்கு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்துவதாக கூறினர். பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் யுபிஐ மூலம் செலுத்திய பணத்தை மோசடியாக எடுத்துள்ளனர். அதன்படி சுமார் ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

இந்த சம்பவம் சைபராபாத், ஐதராபாத், ரச்சகொண்டா காவல் ஆணையரகம் மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள பிற பெருநகரங்களில் நடந்ததாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார்களின்பேரில் சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து விசாணை நடத்தினர். அதில், கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மர்ம ஆசாமிகள் கும்பலாக செல்வதும், அங்கு விலை உயர்ந்தபொருட்களை வாங்கியவுடன், யுபிஐயில் பணம் செலுத்துவதாக கூறி, அந்த ஷோரூமில் பணம் செலுத்தும் ‘யுபிஐ கியூஆர் கோடு’ போட்டோ எடுத்து ராஜஸ்தானில் உள்ள சகோதரருக்கு அனுப்புவதாக கூறி அனுப்பி வைக்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து யுபிஐ மூலம் பணம் அனுப்பியவுடன் பொருட்கள் பெற்றுகொள்கின்றனர்.இதையடுத்து சில மணி நேரத்தில் ராஜஸ்தானில் உள்ளவர்கள், யுபிஐ மூலம் செலுத்திய பணம் தவறுதலாக வேறு கணக்கிற்கு செலுத்திவிட்டதாகவும் எனவே பணத்தை திரும்ப பெறவேண்டும் என வங்கியில் புகாரை பதிவு செய்கின்றனர். அதற்கு பிறகு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை வங்கி மூலம் மீண்டும் தங்களது கணக்கிற்கு திரும்ப பெற்று விடுவதும் தெரியவந்தது.

அதன்படி இதுவரை 1125 பரிவர்த்தனைகளை செய்ததாக போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து வங்கி கணக்கு எண் ஆதாரமாக கொண்டு ராஜஸ்தான் சென்று அந்த கும்பலை சேர்ந்த 13 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.72 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட மீதமுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் தெலங்கானா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு நகரங்களில் இதுபோன்ற மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் எனவே இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பிரபல எலக்ட்ரானிக் ஷோரூம்களில் யுபிஐ கியுஆர் கோடு ஸ்கேன் செய்து ₹4 கோடி நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : UPI ,RAJASTHAN ,Dinakaran ,
× RELATED இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்