×

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு திட்டமிட்டு கலைப்பு: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அனைத்து புள்ளிவிவர ஆய்வுகளையும் மேற்பார்வையிட அமைக்கப்பட்ட புள்ளியியல் நிலைக்குழுவை ஒன்றிய அரசு கலைத்திருக்கிறது. குழுவை கலைப்பதாக உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று குழுவை கலைத்திருப்பது ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது. 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். சமூக நீதியை முறையாக செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு புள்ளியியல் நிலைக் குழுவை கலைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருவது ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு திட்டமிட்டு கலைப்பு: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Statistical Standing Committee ,Vaiko ,Union Govt. ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Union Government ,Ministry of Statistics and Project Implementation ,Geetha ,National Sample Survey Department ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பை...