×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில், இறைவனின் 11 திருவிளையாடல்கள் நடத்தப்படுகின்றன. விழாவின் ஆறாம் நாளான இன்று காலை 10 மணிக்கு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில், பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. விழா முடிந்த பின் ஆவணி மூல வீதியை சுற்றி வந்து, கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சிவகங்கை எஸ்டேட் ஆவியூர் கட்டளை மண்டபத்தில் அம்மனுடன் சுவாமி எழுந்தருளினர்.

இது குறித்து அர்ச்சகர்கள் கூறியதாவது:குலோத்துங்கப் பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வாள்வித்தை குரு வாழ்ந்து வந்தார். அவரது மாணவர்களில் சித்தன் என்பவன் தீயகுணம் கொண்டவன். அவன் வாள்வித்தை பயிற்சி முடித்துவிட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சி பள்ளி ஆரம்பித்தான். மேலும் சித்தன், குருவின் மனைவியிடமே தவறாக நடக்க முயன்றான். இது குறித்து குருவின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார். இதையடுத்து இறைவன் சோமசுந்தரர், வாள்வித்தை குரு வேடத்தில் சென்று, சித்தனைப் போருக்கு அழைத்தார். குருவின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற சித்தனின் மார்பு, நாக்கு, கைகள், கண்ட கண்கள் என ஒவ்வொரு அங்கமாக வெட்டி வீழ்த்தினார் சோமசுந்தரர். இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார்.

இறைவனே குரு வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளையாடலை அறிந்த குலோத்துங்கப் பாண்டியன், வயதான பாணனுக்கு தக்க மரியாதை செய்து கெளரவித்தார். இந்த நிகழ்ச்சி, பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடலாக நடத்தப்படுகிறது என்றனர். பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலையையொட்டி இன்று கோயிலில் கைகளில் வாள், கேடயம் ஏந்தி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். மீனாட்சியம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அர்ச்சகர் ஒருவர், இறைவன் வேடம் பூண்டு கைகளில் வாளுடன் சித்தனைப் போருக்கு அழைத்தல், அங்கம் வெட்டுதல் உள்ளிட்ட திருவிளையாடல் நடத்திக் காட்டினார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple ,Madurai ,Panan ,Avani Moolathru festival ,Madurai Meenakshi Amman Koil ,Meenakshiyamman ,Lord ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை