×

ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா?

ஜென்ம நட்சத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்கின்ற முறையில், ரஜ்ஜு பொருத்தம் வருகிறது. இதனை “மாங்கல்ய பொருத்தம்’’ அல்லது கழுத்துப் பொருத்தம் என்றும் அழைக்கிறார்கள். அதாவது, பெண் கழுத்தில் எவ்வளவு நாட்களுக்கு தாலி சரடு இருக்கும் என்பது இந்த பொருத்தத்தின் அடிப்படை என்கிறார்கள். முதலில் இது எப்படி அமைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த ரஜ்ஜூ பொருத்தமானது, ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. தலை ரஜ்ஜூ நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகியவை. இவற்றில் ஏற்றம் இறக்கம் என்றில்லை.

2. வயிறு ரஜ்ஜூ நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகியவை ஏற்றம் கொண்டவை (ஆரோகணம்).
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை இறக்கம் கொண்டவை (அவரோகணம்).

3. கழுத்து ரஜ்ஜூ நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை ஏற்றம் கொண்டவை (ஆரோகணம்).
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை இறக்கம் கொண்டவை (அவரோகணம்).

4. தொடை ரஜ்ஜூ நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம் ஆகியவை ஏற்றம் கொண்டவை (ஆரோகணம்).
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை இறக்கம் கொண்டவை. (அவரோகணம்).

5. பாதம் ரஜ்ஜூ நட்சத்திரங்கள்
அசுவினி, மகம், மூலம் ஆகியவை ஏற்றம் கொண்டவை (ஆரோகணம்).
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை இறக்கம் கொண்டவை (அவரோகணம்).

*தலை ரஜ்ஜுவானால் புருஷன் மரணம்.
*கழுத்து ரஜ்ஜுவானால் பெண் மரணம்.
*வயிற்று ரஜ்ஜுவானால் புத்திர தோஷம்.
*தொடை ரஜ்ஜுவானால் திரவிய நாசம் அல்லது ஒற்றுமைக் குறைவு.
*பாத ரஜ்ஜுவானால் வியாதி அல்லது பிரயாணத்தால் தீங்கு நேர்வது
இப்படி பலன் போகிறது.

ஒரே ரஜ்ஜுவில் இல்லாமல் இருப்பது ரஜ்ஜு பொருத்தம். அதாவது ஒருவர் அசுவினி, ஒருவர் மூலம் என்றால், இந்த இரண்டு நட்சத்திரங்களும் பாத ரஜ்ஜுவில் அமைவதால் ரஜ்ஜு பொருத்தமில்லை என்று பொருள். இந்த ரஜ்ஜு பொருத்தத்தில் சிலர் என்ன சொல்வார்கள் என்றால், ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், ஆரோகண அவரோகண வரிசையில் இருந்தாலும் பரவாயில்லை என்பார்கள். ஆனால், நடைமுறையில் ரஜ்ஜு பொருத்தம் முழுமையான பலன் அளிக்குமா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம், எதையும் தர்க்க ரீதியாக யோசித்தால்தான் காரண காரியங்கள் தெரியவரும். ஜோதிட விதிகளையும் அப்படித்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.உதாரணமாக, ஒரே நட்சத்திரமாக ஆணும் பெண்ணும் இருந்தால், ஒரே ராசியாக இருக்கலாம் அல்லது அடுத் தடுத்த ராசியாக இருக்கலாம். ஒரே ராசியாக இருக்கின்ற பொழுது ராசி அதிபதி பொருத்தம் என்பது கச்சிதமாக வந்துவிடும்.

இருவரும் ஒரே ராசி என்பதால், ரஜ்ஜு பொருத்தம் இருக்காது. ஆனால், ராசி அதிபதி பொருத்தம் இருக்கும். அவர்களுக்கு திருமணம் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது.எனக்குத் தெரிந்து உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசியைச் சேர்ந்த தம்பதியர் கிட்டத்தட்ட திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வாழ்ந்தார்கள். நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். வீடு கட்டிக் கொண்டார்கள். 70, 75 வயதுக்குப் பிறகுதான் அவர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக காலமானார்கள். இது எனக்கு நன்றாகத் தெரிந்த கதை. இப்படிப் பல ஜாதகங்களையும் பார்த்திருக்கிறேன். தசவிதப் பொருத்தம் என்பது மேலோட்டமான அல்லது முதல் நிலை பொருத்தம் (primary) என்று எடுத்துக் கொள்ளலாம். 10 ஜாதகங்களைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது, அதனை வடிகட்ட இந்த தசவிதப் பொருத்தங்களை நாம் பார்க்கலாம். ஆனால், இதை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது சிறப்பாக இருக்காது. அதே நேரத்தில், தசவித பொருத்தம் இல்லாவிட்டாலும் லக்னாதிபதி, ராசி அதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, நடக்கக்கூடிய தசா புத்திகள் இவைகளை சீர்தூக்கிப் பார்த்து, அவைகள் எல்லாம் சாதகமாக இருக்கும் பட்சத்தில், ஜாதகங்களை இணைக்கலாம். அதில் தவறு நடப்பதற்கு வழி இல்லை.

எதுவாக இருந்தாலும், குறிப்பிட்ட தசாபுத்திகள்தான் சம்பவத்தைத் தீர்மானம் செய்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தசாபுத்திகள் சாதகமாக இருக்கின்ற பொழுது நட்சத்திர விஷயங்கள் அது சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் எடுபடுவதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு இரண்டு எட்டில் ராகு என்கிறார்கள். ஆனால், அவருக்கு அந்த ராகு திசை வாழ்வின் கடைசிப் பகுதியில் அதாவது 70 வயதுக்கு மேல் வருகிறது என்று சொன்னால், அந்த ஜாதகத்தை ராகு-கேது தோஷம் என்று எடுத்து, தள்ளுபடி செய்வதை பெரும்பாலான ஜோதிடர்கள் கையாளுகிறார்கள். அதனால் நிறைய திருமணங்கள் நின்று விடுகின்றன. பெற்றோர்களும் இது என்ன வம்பு என்று நினைத்து அவர்களுக்கு உரிய ஜோதிடர்கள் சொல்வதையே நினைத்துக்கொண்டு என்ன சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

காரணம், ஜோதிடத்தை ஆய்வு முறையிலோ அனுபவ முறையிலோ கணிப்பது கிடையாது. அதைவிட பரம்பரை பரம்பரையாக சொல்லி வருகின்ற விஷயங்களை வைத்துக் கொண்டு ஜாதகங்களை சேர்ப்பதைவிட தள்ளிவிடுகின்றார்கள். தசா புக்திகளுக்கு நட்சத்திரம்தான் அடைப்படை. திருமண பொருத்தத்தில் நட்சத்திரம் சம்பந்தமான தசாபுக்தி இளமையில் கழிந்திருக்கும் என்பதுதான் உண்மை. எனவே வெறும் நட்சத்திர பொருத்தம் எடுபடாது. இனி வரப்போகிற நட்சத்திரம் (தசை) எதிரியாக இருந்தால் என்ன நட்சத்திரப் பொருத்தம் இருந்தும் பயனில்லையே? பல்வேறு புத்தகங்களில் ஜோதிடம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவைகளில் பொருத்தமானதும் உண்டு. பொருத்தம் இல்லாததும் உண்டு.

ஜோதிடப் பேராசிரியர் திரு.மு.மாதேஸ்வரன் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர். முகூர்த்த தரங்கிணி என்று ஒரு பிரம்மாண்டமான நூலை எழுதியிருக்கிறார். அதிலே திருமணப் பொருத்தம் குறித்த பல்வேறு ஆய்வுகள் இருக்கின்றன. அதில் ரஜ்ஜு பொருத்தம் பற்றியும் அவர் குறிப்பிடுகின்றார். அதிலே அவர் அழுத்தமாக சொல்வது இதுதான்.திருமணப் பொருத்தம் பார்ப்பதில் ரஜ்ஜு பொருத்தமும் ஒன்றுதானே தவிர, ரஜ்ஜு தட்டினால் திருமணம் செய்யக் கூடாது என்பதை ஏற்புடைய கருத்து அல்ல. இதில் இவர் வேடிக்கையாகக் குறிப்பிடும் ஒரு விஷயம் உண்டு. ஆண் ரோகிணி நட்சத்திரம். பெண் ரோகிணி நட்சத்திரம். இரண்டும் இருந்தால் கழுத்து ரஜ்ஜு. கழுத்து ரஜ்ஜுவானால் பெண் மரணம் என்று சொல்லும் திருக்கணித பஞ்சாங்கம், தன்னுடைய விவாக பொருத்தங்கள் தலைப்பில், ஏக தின பொருத்தம் என்ற பிரிவில் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஒரே நட்சத்திரமானால் உத்தமம் என்றும் போட்டு இருக்கிறது. இப்படி இரண்டு கருத்தும் இருப்பதால், வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்பது தெளிவாகிறது.பெண் மரணம் என்பதை தீர்மானிக்க கூடிய விஷயம் அந்த ஜாதகத்தினுடைய ஆயுள் ஸ்தானம், ஆயுள் கிரகம், லக்கனாதிபதியினுடைய பலக் குறைவு, தசா புத்திகள், கோள் சாரம் என இத்தனையும் இணைந்துதான் தீர்மானிக்கின்றன தவிர, வெறும் நட்சத்திரம் எப்படி தீர்மானிக்கும்?

The post ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா? appeared first on Dinakaran.

Tags : Janma Nakshatra ,
× RELATED ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?