×

ஜோதிடம் சொல்லும் விருட்ச ரகசியம்!

காலபுருஷ லக்ன பாவத்திற்கு ஒன்பதாம் பாவம் தனுர் ராசியாக வருகிறது. அதன் அதிபதியும் குருவே. மரங்களுடன் ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் எனில், அவரின் ஒன்பதாம் பாவகத்தில் உள்ள கிரகங்களை பாருங்கள். அந்த கிரகங்கள் அவர்களுக்கான பாக்கியங்கள் மரங்கள் வடிவிலும் வரும் என்பது நிச்சயம். குரு மட்டுமே இருந்து அசுப கிரகங்கள் தொடர்பின்றி இருந்தால், மரங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் தரும். விருட்சங்களை வளர்க்கும் காக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நிச்சயம் வளர்ச்சி உண்டு என்பதே உண்மையாகும். ஆனால், அந்த விருட்சம் அவர்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். கோயில்களில் தல விருட்சம் என ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வகையான விருட்சம் இருக்கும். சில தலங்களில் இரண்டு மூன்று தலவிருட்சங்களும் சில கோயில்களில் எட்டு வகையான தல விருட்சங்களும் உண்டு. கோயில் தோன்றுவதற்கு முன்பே அங்கே விருட்சங்கள் வடிவில் முதலில் இறைவன் பிரசன்னமாகிறான். பின்புதான் அங்கு கோயிலுக்குள் எழுந்தளுகிறான். ஆகவேதான் முதலில் இறை தோன்றி விருட்சமே தல விருட்சமாக கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. விருட்சம் என்றால் ஜோதிடத்தில் வியாழன் கிரகமாகும்.

கிரகங்களுக்கான விருட்சங்கள்

குரு – அரச மரம், சந்தன மரம்; புதன் – வாழை மரம், நாயுருவி; செவ்வாய் – கருங்காலி மரம்; சூரியன் – எருக்கன் மரம், வில்வ மரம்; சந்திரன்- மாமரம், பலாச மரம்; ராகு – அரளி செடி, மருத மரம்; சுக்கிரன் – அத்தி மரம்; சனி – வேப்பமரம், வன்னி மரம்; கேது – தர்ப்பை புல், அறுகம்புல் போன்றவை காரகங்களாக அந்த கிரகங்களுக்குரிய மரங்களாக உள்ளன. உங்கள் சுயஜாதகத்தில் எந்த கிரகம் வலுவின்றி இருக்கிறதோ அதற்குரிய விருட்சங்களை கன்றுகளாக வாங்கி பேணி பாதுகாத்து வளர்த்து அதற்கென்று வளர்க்கப்படும் இடங் களிலோ கோயில் தலங்களிலோ நல்ல நாள் பார்த்து அந்த கிரகத்திற்குரிய கிழமைகளில் நட்டு வளர்ப்பது அந்த கிரகத்தின் வலிமையை நீங்கள் பெறுவீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நட்சத்திர அடிப்படையில் விருட்சங்கள்

அசுபதி – ஈட்டி மரம்; பரணி – நெல்லி மரம்; கார்த்திகை – அத்தி மரம்; ரோகிணி – நாவல் மரம்; மிருகசீரிடம் – கருங்காலி மரம்; திருவாதிரை – செங் கருங்காலி மரம்; புனர்பூசம் – மூங்கில் மரம்; பூசம் – அரச மரம்; ஆயில்யம் – புன்னை மரம்; மகம் – ஆலமரம்; பூரம் – பலா மரம்; உத்திரம் – அலரி செடி; அஸ்தம் – அத்தி மரம்; சித்திரை – வில்வ மரம்; சுவாதி – மருத மரம்; விசாகம் – விலாமரம்; அனுஷம் – மகிழமரம்; கேட்டை – பராய் மரம்; மூலம் மரா மரம்; பூராடம் – வஞ்சி மரம்; உத்திராடம் – பலா மரம்; திருவோணம் – எருக்கன் செடி; அவிட்டம் – வன்னி மரம்; சதயம் – கடம்பு மரம்; பூரட்டாதி – தேம மரம்; உத்திரட்டாதி – வேம்பு மரம்; ரேவதி – இலுப்பை மரம். இந்த மரங்களை அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் அந்த நட்சத்திரத்தன்று பதியம் போட்டு வளர்க்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வரும் வரை அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இதனால், உங்கள் நட்சத்திர தோஷம் ஏதும் இருப்பின் அது நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

விருட்ச மருத்துவம்

மனிதன் ஆறறிவு உள்ளவனாகிறான். ஆதலால் ஓரறிவு பெற்ற விருட்சங்களை தமது ஆளுமைக்குள் கொண்டு வந்து அடக்குகிறான். ஓரறிவு உள்ள விருட்சங்கள் மனிதர்களிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கின்றன. உங்கள் மனம் சஞ்சலப்படும் போதும் உங்களுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்படும் போதும் உங்கள் ராசி அல்லது நட்சத்திரத்திற்குரிய மரங்களிடம் உங்களின் குறைகளை மனதார அமைதியாக கூறுங்கள். தினமும் அதனுடன் உரையாடுங்கள். அந்த மரங்களை நீங்கள் அணைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பிரச்னைகளை ஐம்பூதங்களிடம் எடுத்துச் சென்றால் உங்கள் பிரச்னைகள் எளிதாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் உங்களுக்கு இயற்கையாகவே உண்டாகும் என்பது ஆச்சர்யமான உண்மை.அக்காலத்தில், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் விநாயகர் இருக்கும் அரச மரத்தை சுற்றி வந்ததால் பிள்ளைப்பேறு உண்டானது என்பது அனுபவ உண்மை. அரச மரம் வெளியிடும் வாயுவை, அதாவது மீத்தேன் வாயுவை பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகி அவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கான தகுதியடைகிறார்கள். என்றும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்கிறது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த மீத்தேன் வாயு குருவின் காரகத்தின் கொண்டைக் கடலையிலும் உள்ளது. எனவே, விருட்சம் என்பது சிறந்த மருத்துவமாகவும் உள்ளது.

விருட்சங்களை வீட்டில் வளர்க்கலாமா?

விருட்சங்களை கோயிலில் உள்ள பிரகாரங்களிலோ, நீர் வளம் உள்ள பாதுகாப்பான பகுதிகளிலோ அல்லது வனங்களிலோ வைக்கலாம். வீடுகளில் வளர்ப்பதற்கு சரியான சூழ்நிலைகள் இருக்காது. சில வீடுகளில் மாமரம் வளர்த்தால் வீடு விற்பனைக்கு தயாராகும். அதாவது, வீட்டில் பங்காளிகள் தகராறு ஏற்படும். ஏனெனில் அவரின் சுய ஜாதகத்தில் அந்த மரம் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதாகும். ஒரு வீட்டில் நான்கைந்து நபர் இருக்கும் போது ஒருவருக்கு நேர்மறையாகவும் ஒருவருக்கு எதிர்மறையாகவும் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும், இப்பொழுது நகரமயமாக்கல் காரணமாக மரங்களை வெட்டுவதால் நீங்கள் வளர்த்து அது உங்கள் கண் முன்னே வெட்டப்படுமானால் மனம் சஞ்சலம் உண்டாகும். ஆகவே, வீட்டில் மரம் வளர்ப்பது என்பது இக்காலத்தில் நகரத்திற்கு இடம் கிடைப்பதில்லை.

அதிசய விருட்சங்கள்

ஷர்ப்ப கந்தி மரத்தின் அருகில் பாம்புகள் நெருங்காது. ஆகவே, அக்காலத்தில் இதன் பட்டைகளையோ குச்சிகளையோ இடுப்பிலோ உடலிலோ கட்டிக் கொண்டு வயல்களில் வேலை செய்வார்கள். ஏரழிஞ்சல் மரத்திலிருந்து விழும் விதைகள் நகர்ந்து சென்று மறு படியும் மரங்களிலே ஒட்டிக் கொள்ளும். இந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பட்டைகளை கொண்டு கஷாயம் செய்து பருகினால் நீண்ட ஆயுள் உண்டாகும்.கௌதம புத்தருக்கு ஞானத்தையும் முக்தியையும் கொடுத்தது போதி மரம் என்ற அரச மரமே. அதேபோல் திருமூலருக்கும் அரச மரமே ஞானத்தை கொடுத்தது. ஆதலால் அரச மரம் என்றும் அதிசய மரம்தான்.

The post ஜோதிடம் சொல்லும் விருட்ச ரகசியம்! appeared first on Dinakaran.

Tags : Kalabrusha Lakhna Sava ,Tanur Rasi ,
× RELATED நவராத்திரி நாயகிகள்