×

பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்; போராடும் மருத்துவர்களுக்கு இன்று மாலையுடன் கெடு முடிவு: ஜூனியர் டாக்டர்களின் திடீர் அறிவிப்பால் சிக்கல்

கொல்கத்தா: கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து போராடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கல்லூரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேற்கண்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வரும் 17ம் தேதிக்குள் புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும் இன்று மாலை 5 மணிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், மாநில சுகாதாரத் துறை செயலர் மற்றும் சுகாதாரக் கல்வி இயக்குநர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை மாநில சுகாதாரத் துறையின் தலைமையகமான ‘ஸ்வஸ்த்ய பவனை’ நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறுகையில் ‘எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கொலையான மருத்துவருக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களது போராட்டத்தைத் தொடர்வோம். நாங்கள் பணிக்குத் திரும்ப மாட்டோம். மாநில சுகாதார செயலாளர், சுகாதார கல்வி இயக்குனர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றனர்.

கடந்த ஒரு மாதமாக ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்பாததால், மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தங்களது போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் கூறி வருவதால் இன்று மாலைக்கு மேல் போராட்டம் நடத்தும் டாக்டர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும் என்று தெரிகிறது.

The post பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்; போராடும் மருத்துவர்களுக்கு இன்று மாலையுடன் கெடு முடிவு: ஜூனியர் டாக்டர்களின் திடீர் அறிவிப்பால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kolkata ,RG Kar Medical College ,Hospital Post Graduate Training Doctor… ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர்...