×

கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

திண்டுக்கல்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியைப் பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகப்படியான பெண்களுக்கு வேலைவாய்ப்பு இதில் கிடைக்கும். இதுவரை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் தொழிற்சாலை திருச்சியில் வருவதால் திண்டுக்கல் , தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள். ஜாபெல் என்ற தொழிற்சாலை ஆப்பிள்,HCL உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்க கூடிய நிறுவனமாக உள்ளது. மார்ச் 2026-ம் ஆண்டு இந்த தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். மேலும் ஒன்றிய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை எந்த வகையிலாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கருதிதான் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது.

நிதியை நிறுத்துவதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. ஒன்றிய அமைச்சர் ஏதோ ஒரு நிர்பந்தத்தால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தள்ளப்படுகிறார். நிதி கேட்கும் விஷயத்தையும் மகாவிஷ்ணு விஷயத்தையும் ஒன்றாக பார்க்க கூடாது .

துவக்க பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு:
ஆசிரியர்கள் போராட்டத்தில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கிறார்கள் என்று பார்த்து முடிவு செய்யப்படும், மகாவிஷ்ணு விஷயத்தை தொடர்ந்து விரிவான வழி காட்டு நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சம்பந்தமாக முழுமையான விசாரணை முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்து அது குறித்து முடிவு செய்யப்படும். மூடநம்பிக்கையை கொண்டு பேசி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு செல்லும் பொழுது இது போன்ற மூடநம்பிக்கைகளை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மதம் சார்ந்து கல்விக்குள் எந்த விஷயமும் கலக்கக்கூடாது. அரசு உதவி பெறும் பள்ளி ,தனியார் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

The post கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Mahez ,Dindigul ,Union ,Department of Education ,Ambil Mahes ,Dinakaran ,
× RELATED கலர் கலரா ரயிலுக்கு வண்ணம் தீட்டி...