×

சில கோயில்கள் சில சுவாரஸ்யங்கள்..!

யானைகள் ஊர்வலம் நடக்கும் ஒரே தமிழக கோயில்கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து ஆருவடை செல்லும் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் ஆலப்பன்கோடு ஸ்ரீ ஈஸ்வர கால புதத்தான் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் காலத்தில் கட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு தென்னம் பூவும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டில் தென்னம் பூ பிரசாதமாக வழங்கப்படும் ஒரே கோயில் இதுதான்.

தமிழ்நாட்டின் ஆலப்பன்கோடு மட்டுமே ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான யானைகள் கலந்து கொள்ளும் ஒரே கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலத்தில் இணைகின்றன. ஊர்வலம் காரியத்தாரா கோயிலில் இருந்து தொடங்கி ஆலப்பன்கோட்டில் நிறைவடையும், ஊர்வலம் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் செல்லும். விழாவை காண கேரளா மற்றும் தமிழக பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமை திருவிழா நடைபெறும்.

தியான கோயில்

கோவை உடுமலைப் பேட்டையில் இருந்து 18 கிமீ தொலைவில் குமாரலிங்கம் என்ற ஊரில், ஒரு சிவன் கோயில் உள்ளது. இங்கே பிரதோஷம், சிவராத்திரி என்று எந்த விசேஷமும் நடப்பதில்லை. தத்தாத்ரேய முனிவரின் சாபத்திற்கு பரிகாரமாக கட்டப்பட்ட கோயில். எனவே இங்கு தியானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. கோயிலும் காலையில் அரைமணிநேரம், மாலையில் அரைமணிநேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வரும் பக்தர்கள் தியானம் மட்டுமே செய்ய முடியும்.

காற்று வீசும் கல் ஜன்னல்

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்து 7கி.மீ தூரத்தில் கோபால்சாமி குடவரைக் கோயில் உள்ளது. இது 1000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கோயில். மலையைக் குடைந்து அதன் உள்ளே கர்ப்பகிரகம் அமைத்துள்ளனர். ஒரு செங்குத்துப் பாறை போன்ற குன்றில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்தில் ரங்கநாதரும் குன்றின் மேல் கோபால்சாமி எனப்படும் விஷ்ணுவிற்கும் என இரு வகையாக கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.

தேவி பூதேவி தாயாருடன் பிரம்மா, ஆஞ்சநேயர், கருடன் சூழ அனந்த சயன கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். மலை மேல் சத்யபாமா ருக்மணி சமேத கோபாலசாமி காட்சி தருகிறார். மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோயிலில் ஒரே கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஜன்னல் போன்ற அமைப்பில் இருந்து காற்று மிக அழகாக வீசுகிறது.

ஓம் எதிரொலிக்கும் கோயில்

திருச்சி திருவானைக்காவல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள கீழ் கொண்டையன் பேட்டையில் உள்ளது. ஜோதிர்லிங்கேஸ்வரர் ஆலயம். இங்கு ஈசன் ஜோதியாய் அருள்பாலிக்கிறார். இங்கு கருவறையில் ஈசனுக்கு எண்கோண வடிவத்தில் ஐம்பொன்னும், நவக்கிரகக் கற்களும், சிதம்பரச் சக்கரமும் பதிக்கப்பட்டு அதன் மேல் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கருவறையின் தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்குத் திசையில் இருக்கும் சுவர்களில் உள்ள சிறிய துவாரங்களில் ஏதேனும் ஒன்றில் நாம் ‘‘ஓம்’’ என்று சொல்ல அந்த ஓசை நான்கு புறமும் எதிரொலித்து நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. இந்த ஆலயத்தின் கோபுரத்தை நாம் வெளியே இருந்து வணங்கினால் அது மூலவரை வணங்குவதற்கு சமம், ஏனெனில் மூலவரான ஜோதிர்லிங்கத்திற்கு நேர்மேலே நேராக கலசம் வரை துவாரம் உள்ளது.

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட சிவன் கோயில்

விழுப்புரம் அடுத்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைத்துள்ளது  அபிராமேஸ்வரர் கோயில். உடனுறையாக ஸ்ரீ முத்தாம்பிகை அம்மனும் உடன் இந்த கோயிலில் இருக்கிறார். இக்கோயில் 2000 வருடங்களுக்கு மேல் பழமையானது எனவும், கோடி சித்தர்கள் வழிபட்டு கொடுத்த நாதரை இங்கு தரிசிக்கலாம் என்கிறார்கள். உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட கோயில் இதுவே ஆகும். கோயிலில் சிறிய துவாரம் வழியாகவே சிவலிங்கத்தை காண முடிகிறது. பூஜை செய்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது அதில் சென்றால் சிவலிங்கத்தை நேரில் காணலாம். வாசலில் இருந்து நேராக பார்க்கும்போது அம்மன் சிலை தெரியும். இந்த சிறப்பு காண்பதற்காக பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

சேவல் கோயில்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாழையடி முனியசாமி – ஆதி காமாட்சி அம்மன் கோயில். இந்த கோயிலில் திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், வேலை, சொத்துப் பிரச்னை, மன நோய், தீராத நோய் தீர என எல்லாவற்றுக்கும் பிரார்த்தனை காணிக்கையாக சேவல்களை கொடுக்கிறார்கள். கோயிலுக்கு வழங்கப்பட்ட சேவல்களை யாரும் கொள்வதில்லை, விற்பனை செய்வதில்லை.

அதை வளர்க்கிறார்கள். பக்தர்கள் இங்கு இருக்கும் சேவல்களை தெய்வமாக வணங்குகிறார்கள். பொது பிரச்னை என்றால் சிவப்பு நிற சேவல்களையும், சொத்து பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை நிற சேவல்களையும் தங்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கையாக கொடுக்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் தானியங்களுடன் வருகிறார்கள் எல்லாம் சேவல்களுக்கு போட்டு வணங்கத்தான்.

தோஷம் தீர மயிலுக்கு இரை கொடுக்கும் பக்தர்கள்

திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோயில். குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் நிறைய மயில்கள் திரியும். இந்த மதில்களுக்குள்ளும் திருமணத்தடை வேண்டி வரும் பக்தர்கள் கடலை போன்ற உணவுகளை உள்ளங்கையில் வைத்து வழங்குகின்றனர். அதனை தின்ற பின் அந்த மயில்கள் அந்த பக்தர்களை நிமிர்ந்து பார்த்தால் அவர்களது திருமண தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

வாரம் ஒருமுறை மட்டுமே திறக்கும் கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சின்ன மனூர் நகருக்கு அருகில் உள்ள சாலமலையில் சஞ்சீவி பெருமாள் கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சஞ்சீவி பெருமாள். தனது மனைவிகளான லட்சுமி, நாச்சியார் ஆகியோருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில், சனிக்கிழமைகளில் மட்டுமே தரிசனத்திற்கு திறக்கப்படும். பக்தர்கள் இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டி சஞ்சீவி பெருமாளிடம் தொடர்ந்து ஏழு சனிக் கிழமைகள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சின்னமனூரிலிருந்து சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் கோயில் பூட்டியிருக்கும்.

கோவீ.ராஜேந்திரன்

The post சில கோயில்கள் சில சுவாரஸ்யங்கள்..! appeared first on Dinakaran.

Tags : SRI ,ISWARA ,KALA BUDDHATHAN ,ALPANKODU ,MARTHANDAN ,ARUVADI ,Thiruvitangur ,
× RELATED இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை...