×

660 மகளிர் உதவிக்குழுக்களுக்கு ₹65.60 கோடி வங்கி கடனுதவி

*ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 660 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.65.60 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்.தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.2,735 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை மதுரை மாவட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில் மாதேஸ்வரன் எம்.பி., எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., பங்கேற்று, 660 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.65.60 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மகளிருக்கான 5 முத்தான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2021-2022ம் ஆண்டு 9,081 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.499.20 கோடி, 2022-23ம் ஆண்டு 10,751 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹658.62 கோடி, 2023-24ம் ஆண்டு 10,082 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.674.69 கோடி மற்றும் நடப்பாண்டில் 4982 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.271.70 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 35,556 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2169.81 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கென புதியதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, முதலமைச்சர் உருவாக்கி உத்தரவிட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள், அந்த வங்கி செயல்பாட்டிற்கு வரும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பாட்டிற்கு வரும் போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து கடனுதவிகளும் தாராளமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கடன் திட்டங்களையும், உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல், உரிய காலத்தில், உரிய முறையில் திரும்பி செலுத்தினால் தான் வங்கிகள் தொடர்ந்து கடனுதவிகளை வழங்க இயலும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் பூபதி, மாநகராட்சி உறுப்பினர்கள் சிவக்குமார், குட்டி(எ) செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் அருளரசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, மாவட்ட செயல் அலுவலர்(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) கங்காதரன், அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், பாலசுப்பிரமணியன், கொமதேக விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்காக முதல்வரின் முத்தான 5 திட்டங்கள்

விழாவில் ராஜேஸ்குமார் எம்பி பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மகளிருக்கான 5 முத்தான திட்டங்களான பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மற்றும் ஏழை- எளிய மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பயன்படுத்தி பெண்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்,’ என்றார்.

The post 660 மகளிர் உதவிக்குழுக்களுக்கு ₹65.60 கோடி வங்கி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Rajeskumar ,Namakkal ,Namakkal district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...