×

தாய்மொழியான தமிழ், பன்னாட்டு மொழி ஆங்கிலம் மாணவ-மாணவியர்கள் இருமொழி கொள்கையில் படித்தாலே போதும்

* வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம்

* அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம் : தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையில் மாணவ-மாணவிகள் படித்தாலே வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம் என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:

அரசு பள்ளியில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடை, காலணி, விலையில்லா மிதிவண்டி, மதிய உணவு, கல்வி உதவித்தொகை, விடுதி வசதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், 2024-2025 கல்வி ஆண்டில் 16,949 மாணவர்களுக்கு ரூ.8,17,81,700 செலவில் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.

காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உயர்கல்வி படிப்பதற்கு ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், சிறப்பு வழிகாட்டுதல்களையும், உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்துள்ளார்கள்.

மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து, மாணவர்கள் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ஏதுமின்றி உயர்கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார்கள்.

அனைத்து பாடங்களையும், தாய்மொழி தமிழ் வழியில் படிக்கும்போது மாணவர்கள், நன்கு புரிந்து கொண்டு கல்வி படித்து வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே போதுமானது. தாய்மொழியான தமிழும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் படித்தால் பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பன்னாட்டு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும், பன்னாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்கும் ஆங்கில வழிக்கல்வியும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சச்சிதாநந்தம், நகர்மன்ற துணைத்தலைவர் சித்திக் அலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் சசிகலா, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

6 புறநகர் பேருந்து சேவை துவக்கம்

இதனிடையே விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட, விழுப்புரம்-புதுச்சேரி, திருக்கோவிலூர்-விழுப்புரம்-புதுச்சேரி, விழுப்புரம்-புதுச்சேரி-திருச்சி, புதுச்சேரி-ஆரோவில், விழுப்புரம்-புதுச்சேரி-சேலம் ஆகிய வழிதடங்களில் 6 புறநகர் பேருந்துகளை துவக்கி வைத்தார்.

2023-2024ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 81 பேருந்துகளில் 51 புதிய புறநகர் பேருந்துகள், 15 மகளிர் பயண பேருந்துகள் என மொத்தம் 66 பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டு தற்போது 6 புறநகர் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலாண் இயக்குநகர் குணசேகர், தொமுச பொதுச்செயலாளர் சேகர், நிர்வாக பணியாளர் சங்கம் வாலிபால்மணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

The post தாய்மொழியான தமிழ், பன்னாட்டு மொழி ஆங்கிலம் மாணவ-மாணவியர்கள் இருமொழி கொள்கையில் படித்தாலே போதும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Villupuram Government Model High School for Girls ,
× RELATED குமரி அனந்தன் இல்லையென்றால்...