×

அல்லி மாயார் பழங்குடியின மக்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததாக குற்றச்சாட்டு

*உரிய தீர்வு காண கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள அல்லி மாயார் பழங்குடியின மக்கள் தங்களுக்கு தேவையான விவசாய பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல வனத்துறையினர் திடீரென தடை விதித்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண கோரியும் ஊட்டியில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலூகா, தெங்குமரஹாடா அருகே அல்லி மாயார் கிராமம் உள்ளது. கடைக்கோடியில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து செல்ல வேண்டுமெனில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பவானி சாகர் வழியாக செல்ல முடியும். இக்கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கால்நடை வளர்ப்பு விவசாயம் ஆகிய தொழில்களை செய்து வரும் இந்த பழங்குடி மக்கள் சொந்த வேலை, அரசு அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலை, மருத்துவம் மற்றும் உயர் கல்வி, தாங்கள் விளைவிக்கும் விவசாய பயிர்களை விற்பனை செய்தல் என அனைத்திற்கும் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பவானிசாகர் பகுதிக்கு வந்துதான் செல்கின்றனர். தினமும் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினுள் உள்ள வன சாலையில் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

வனவிலங்குகளின் அச்சத்திற்கு இடையே குண்டும், குழியுமான மண் சாலையில் இந்த மக்கள் சென்று வர பவானிசாகரில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பழங்குடியின மக்கள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள், வீடுகளை சீரமைக்க தேவையான கட்டுமான பொருட்களையும் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

பழங்குடியின மக்கள் கொண்டு செல்லும் பொருட்களை காரக்கொரை வனத்துறை சோனை சாவடியில் பறிமுதல் செய்து வருகிறனர். இதனால் அதிருப்தி அடைந்த அல்லி மாயார் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஊர் தலைவர் ரங்கசாமி தலைமையில் நேற்று ஊட்டியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களது கோரிக்கையை கேட்டறிந்த கலெக்டர் இப்பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post அல்லி மாயார் பழங்குடியின மக்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mayar ,Kadagodi ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்...