×

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

 

ஒடுகத்தூர், செப்.10: ஒடுகத்தூர் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக 2 வாலிபர்கள் மல்லுக்கட்டி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(25). அக்ராகரம் கிராமத்தை சேர்ந்தவர் நாத்(25). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கவுரிசங்கருக்கும் அக்ராகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சிறுமியிடம் நாத்தும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர், இவர்கள் இருவரும் தனித்தனியே அந்த சிறுமியிடம் தங்களது காதலை தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி இருவரின் காதலையும் ஏற்கவில்லையாம். இந்நிலையில், கவுரிசங்கர் சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வருவதை அறிந்த நாத் நேற்று முன்தினம் அவரது கிராமத்திற்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கினாராம்.

இதற்கு பழிவாங்கும் வகையில் கவுரிசங்கரும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு நாத் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கினார்களாம். இதை பார்த்த நாத்தின் உறவினர்களும் பதிலுக்கு அவர்களுடன் சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில், இதனையறிந்த அந்த சிறுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இதுதொடர்பாக இருதரப்பினரும் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக 2 கிராம வாலிபர்களும் மல்லுக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mallukatta ,Odugathur ,Vellore district ,Tholapalli panchayat ,Dinakaran ,
× RELATED மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையம்...