உடுமலை, செப். 10: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சதுர்த்தியை ஒட்டி இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் ,பாரத் சேனா, அனுமன் சேனா, தமிழ்நாடு இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் உடுமலை கொழுமம், மடத்துக்குளம், தளி உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
3 அடி முதல் 10 அடி உயரம் உள்ள ராஜகணபதி, வர சக்தி விநாயகர், பால விநாயகர், நாக விநாயகர், பஞ்சமுக விநாயகர் மற்றும் எலி, நந்தி, சிங்கம், போன்ற வாகனங்களில் அமர்ந்த விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அந்தந்த பகுதிகளில் இருந்த விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அமராவதி ஆற்றின் கரையில் சிலைகளை கரைத்தனர். முன்னதாக உடுமலை மடத்துக்குளம் காவல் நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
The post உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் 250 சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு: 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் appeared first on Dinakaran.