சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டுவரப்பட்டு கேட்பாரற்று கிடப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி, ஆட்டுக் கால், காளான், பன்னீர், கெபாப் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வந்துள்ளது. இந்த பொருட்கள் வரவேண்டிய நேரத்தில் வராமல் தாமதமாக வந்துள்ளது.
தற்போது, அதை திறந்து பார்த்ததும் துர்நாற்றம், புழு என மிகவும் மோசமாக இருந்தது. இதை எடுத்து செல்ல யாரும் முன்வராத காரணத்தால் ரயில்வே அதிகாரிகள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு எடுத்து சென்று அழிக்கப்படும். இது யாருக்கு அனுப்பப்பட்ட பார்சல் என்று தெரியவில்லை, பெயர் குறிப்பிடப்படவில்லை.
பொதுவாக, இதுபோன்று இறைச்சி பார்சலில் அனுப்பும்போது முறையாக வெட்டப்பட்ட இறைச்சி என்றும், சாப்பிட ஏற்ற இறைச்சி என்றும் மருத்துவர்களிடம் இருந்து அனுமதி பெற்று அனுப்ப வேண்டும். ஆனால் இந்த பார்சலில் ஏதும் இல்லை. இதனால் இனி வரும் உணவு பார்சலில் முறையாக பெயர் மற்றும் முகவரி இருக்கிறதா என்று உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தற்போது உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை காரணமாக சென்னையில் இருக்கும் பெரிய விடுதிகள், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கூடத்தில் மட்டுமே இறைச்சி வாங்கி மக்களுக்கு உணவாக அளிக்கின்றனர். ஆனால் சாலை ஓரத்தில் இருக்கும் கடைகள் அவ்வாறு செய்வதில்லை. எனவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் விரைந்து வந்து ஒன்றரை டன் ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் அவற்றை கொட்டி ரசாயன பவுடர் தூவி அழித்தனர்.
The post டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்: யார் அனுப்பியது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.