×

மதுரையில் 31,220 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடக்கம் இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தை கொண்டது தமிழ்நாட்டு கல்விமுறை தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

மதுரை: இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தைக் கொண்டது நம் தமிழ்நாட்டுக் கல்விமுறை தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் பேசினார். மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா வரவேற்றார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதுமுள்ள 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 பேருக்கு ரூ.2,874.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அரசின் சேவைகளை மக்கள் தேடிச் சென்ற காலம் மாறி, அரசே மக்களைத் தேடி வந்து திட்டங்களை வழங்கி வருகிறது.

இன்று மதுரையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 31 ஆயிரம் மகளிர் உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் சகோதரிகளுக்கு, 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் தமிழ்நாட்டு மகளிர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். இந்திய அளவில் வேலைக்கு செல்லும் மகளிர் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தான் காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முக்கிய இடத்தில் இருக்கிறது. உயர்கல்வியில் சேருகிற மாணவர்களின் சராசரியில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 50 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தைக் கொண்டது நம் தமிழ்நாட்டுக் கல்விமுறை தான். வங்கிக்கடன் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.

மகளிர் சிலருக்கு தொழில் தொடங்க தயக்கம் இருக்கும். கலைஞர் கூறிய ஒரு விஷயத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீச்சல் கத்துகிட்ட பிறகுதான் ஆத்துல இறங்கி நீச்சல் அடிப்பேன்னு சொன்னா. ஒரு நாளும் நீச்சல் கத்துக்க முடியாது. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் மகளிராகிய நீங்கள், தொழில் முனைவோர் ஆகிட துணிச்சலோடு செயல்பட வேண்டும். உங்களுக்கு அனைத்து வகையிலும் நம் தமிழ்நாடு அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு செல்லும் வழியில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கழிப்பறைக்குள் சென்று சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

 

The post மதுரையில் 31,220 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடக்கம் இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தை கொண்டது தமிழ்நாட்டு கல்விமுறை தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Madurai ,Minister ,Udayanidhi Stalin ,Othuktai ,Collector ,Sangeetha ,Dinakaran ,
× RELATED கல்வித்துறையில் செயல்படுத்தப்படும்...