×

கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகை ரத்து விவகாரம் அவகாசம் வழங்கிய பிறகு நிலம் கையகப்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ரேஸ்கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று காலை தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து நிலத்தை சுவாதீனம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நில நிர்வாக ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத்தான் நிலம் சுவாதீனம் செய்யப்பட்டுள்ளது. வாடகை பாக்கி தொகை அரசுக்கு வழங்கப்படவில்லை. எந்த அனுமதியும் பெறாமல் அங்கு குதிரை பந்தயம் நடைபெறுகிறது. திருமண மண்டபம் நடத்தப்படுவதுடன் சட்டவிரோத செயல்களும் நடைபெறுகிறது. ஒப்பந்தப்படி அரசு குத்தகையை ரத்து செய்ய முடியும். ஏற்கனவே, 2018லேயே நோட்டீஸ் தரப்பட்டது என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஒரே நேரத்தில் குத்தகையை ரத்து செய்து நிலத்தை சுவாதீனம் எடுக்க கூடாது.

குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, காலி செய்ய அவகாசம் வழங்கும் வகையில் குத்தகை ரத்து உத்தரவு குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும். தற்போது கையகப்படும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறோம் என்றார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்து தொடர்பான நோட்டீஸ் வழங்கி அவர்களிடம் பதில் கேட்டு அதன் பின்னர் காலி செய்வதற்கான அவகாசம் கொடுத்த பின்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

 

The post கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகை ரத்து விவகாரம் அவகாசம் வழங்கிய பிறகு நிலம் கையகப்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kindi Racecourse ,Tamil Nadu Govt ,ICourt ,Chennai ,Tamil Nadu government ,Chennai High Court ,Chennai Kindi Racecourse ,Chennai Racecourse ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி