×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரையிறக்கம்: கிராம மக்கள் திரண்டதால் உத்திரமேரூர் அருகே பரபரப்பு

சென்னை: உத்திரமேரூர் அருகே, எடமச்சி கிராமத்திற்குட்பட்ட விவசாய நிலத்தில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் இசட் ஏ-930ல் நேற்று காலை பயிற்சியாளர்கள் கேப்டன் சஞ்சிவ் மற்றும் நீரஜ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டரில் சிறு தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், உத்திரமேரூர் அருகே எடமச்சி கிராமத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில் பத்திரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து பழுதுபார்க்க வேறு ஒரு ஹெலிகாப்டரில் மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு பழுதான ஹெலிகாப்டரின் கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் அங்கு கிராம மக்கள் அதிக அளவில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்தில் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதேபோல் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சாலவாக்கம் பகுதியில் இசட் ஏ-1844 என்ற ஹெலிகாப்டர் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரையிறக்கம்: கிராம மக்கள் திரண்டதால் உத்திரமேரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Uttaramerur ,CHENNAI ,Edamachi ,Sanjiv ,Neeraj ,Uttara Merur ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி