×

ஆண்டு பெருவிழா நிறைவு: பூண்டிமாதா பேராலய தேர்பவனி கோலாகலம்

தஞ்சை: ஆண்டு பெருவிழாவையொட்டி பூண்டி மாதா பேராலயத்தல் அன்னை மரியாளின் தேர்பவனி நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டியில் வீரமாமுனிவர் கட்டிய மாதா கோயில் பசிலிக்கா எனப்படும் பூண்டிமாதா பேராலயமாக, வானுயர்ந்த கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை சிறிய சப்பர பவனியும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்று வந்தது. நவநாட்கள் திருப்பலி பூசைகளை பங்கு குருமார்கள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்றிரவு நடந்தது.

பேராலயத்தின் முகப்பில் மல்லிகை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து “பூண்டி மாதாவின் ஆடம்பர தேர் பவனியை” சேலம் மறைமாவட்ட ஆயர் ராயப்பன் புனிதப்படுத்தி துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி சென்றனர். விழாவை முன்னிட்டு கோயில் கோபுரங்கள், வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலித்தது. தேர்பவனியின்போது வாணவேடிக்கை நடந்தது. திருவிழா நிறைவு நாளான இன்று (9ம் தேதி) காலை 6 மணிக்கு கூட்டுதிருப்பலியை சேலம் மறைமாவட்ட ஆயர் ராயப்பன் தலைமையில் குருமார்கள் நிறைவேற்றினர். மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.

The post ஆண்டு பெருவிழா நிறைவு: பூண்டிமாதா பேராலய தேர்பவனி கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Poondimata Cathedral ,Therphavani Kolakalam ,Thanjavur ,Mother Mary ,Bundi Mata Cathedral ,Poondimata temple ,Veerama Munivar ,Alamelupuram Boondi ,Thirukkatupalli ,Poondimata ,
× RELATED தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது