×

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 22 மீனவர்களை மீட்க கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

தூத்துக்குடி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 22 மீனவர்களை மீட்கக் கோரி தருவைகுளத்தில் இன்று முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி தென்டேனிலா (23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜூலை 20ம்தேதி தருவைகுளம், கீழ வைப்பார், கீழ அரசடி, வேம்பார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்களும், அதேபோல் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜூலை 23ம்தேதி தருவைகுளம், ராமநாதபுரம், நரிப்பையூர், பெரியபட்டினம், பாறைகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களும் என மொத்தம் 22 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றனர்.

இந்த 2 விசைப்படகுகளையும் ஆக.5ம்தேதி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களையும் கைது செய்து அங்குள்ள வாரியாபொல சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவோனா விமலரத்னா, 22 மீனவர்களின் காவலை நாளை வரை (செப்.10) நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் அவர்களில் 12 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் அவர்களுக்கு தலா ரூ.29 லட்சத்து 16 ஆயிரத்து 666 என மொத்தம் ரூ.3 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தும், கட்டத் தவறினால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தும் கோர்ட் உத்தரவிட்டது. 10 மீனவர்கள் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் தூத்துக்குடி கலெக்டரிடம், மீனவர்களை எந்த அபராதமும் இன்றி மீட்டுத் தரக் கோரி மனுக்கள் அளித்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினும், இப் பிரச்னை குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இப்பிரச்னையில் ஒன்றிய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் 22 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் தருவைகுளம் பொதுமக்கள் இன்று (9ம்தேதி) கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி தருவைகுளத்தில் இன்று திட்டமிட்டபடி முழு கடையடைப்பும், உண்ணாவிரதமும் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 22 மீனவர்களை மீட்க கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Sri Lanka ,Daruwaikulam ,Anthony Thendanila ,Daruwaikulam, Tuticorin district ,
× RELATED தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!