×

117 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு

நெல்லை: நெல்லை, மானூர் அம்பலவாண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 117 ஆண்டிற்கு பின் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இணைந்தது மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோயில். இந்த கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலில் ரூ.69 லட்சம் அரசு நிதியில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து 117 ஆண்டுகள் கழித்து அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா நேற்று காலையில் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சித்திரசபை அம்பலவாணர், காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர், சன்னதி விமானங்கள், கருவறைகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், எம்.பி.க்கள் நெல்லை ராபர்ட்புரூஸ், தென்காசி ராணிஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் பாளை அப்துல்வகாப், சங்கரன்கோவில் ராஜா, நெல்லை நயினார்நாகேந்திரன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

* ‘2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்’
நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 2098 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் திமுக ஆட்சிதான் அறநிலையத்துறையின் பொற்காலம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறையில் இதுவரை ரூ.5,372 கோடி செலவில் 20,252 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ.142 கோடி நிதி பெறப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான 37 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

805 கோயில்களுக்கு சொந்தமான 6703 கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 6853 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கோயில் நிலங்களில் கோயில்கள் பெயரில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரூ.29 கோடி செலவில் 5 புதிய தங்க தேர் திருப்பணியும், 9 கோயில்களில் சுமார் ரூ.27 கோடி செலவில் வெள்ளித்தேர் திருப்பணியும் நடந்து வருகிறது. திருச்செந்தூர், பழனி உள்பட 19 கோயில்களில் ரூ.1530 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 117 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Nellai Manur Ambalavana Swamy Temple ,Minister ,Shekharbabu ,Nellai ,Manur Ambalavan Swamy Temple ,Hindu Religious Endowments ,Shekhar Babu ,Nellaiappar ,
× RELATED பொன்னமராவதி அருகே மணப்பட்டி சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம்