×

தங்கம் விலையில் மாற்றம்: ஒரே நாளில் சவரன் ரூ400 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760க்கும் விற்கப்பட்டது. பண்டிகை நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கம் விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயரத் தொடங்கியது. தினம், தினம் புதிய உச்சத்தையும் தொட்டது. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55,360க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் உச்சபட்ச விலையாகும். இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது. அதன்பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இம்மாதம் 3ம் தேதி சவரன் ரூ.53,360க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி, 5ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. எனினும் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,720க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760க்கும் விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை, சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விஷேச தினங்கள் தொடர்ச்சியாக வருகின்றன. இந்த நேரத்தில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருவது தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலையில் மாற்றம்: ஒரே நாளில் சவரன் ரூ400 உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை